இரு மருத்துவர்கள் இதை தவிர்த்திருந்தால் மாணவி உயிரிழந்திருக்க மாட்டார்..! வெளியானது அதிர்ச்சி தகவல்
சென்னை பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்ற கால்பந்து வீராங்கனையின் காலில் அறுவை சிகிச்சைக்கு பின்னர் இறுக்கமாக கட்டுபோட்ட இரு அரசு மருத்துவர்களின் கவனக்குறைவால், இளம் வீராங்கனையின் உயிர் பறிபோயுள்ளது.
சென்னை ராணிமேரி கல்லூரி மாணவியான வியாசர்பாடியை சேர்ந்த கால்பந்தாட்ட வீராங்கனை ப்ரியாவுக்கு வலது காலில் முட்டுப்பகுதியில் சவ்வு கிழிந்ததால் கடந்த 5ந்தேதி சிகிச்சைக்காக சென்னை பெரம்பூர் பெரியார் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மூட்டில் கிழிந்த சவ்வுப்பகுதியை இணைப்பதற்காக இரு மருத்துவர்கள் சுமார் 5 மணி நேரம் அறுவை சிகிச்சை மேற்க் கொண்டனர்
அறுவை சிகிச்சைக்கு பின்னர் காயத்தை சுற்றி போடப்பட்ட கட்டு இறுக்கமாக உள்ளதா ? தளர்வாக உள்ளதா ? ரத்த ஓட்டம் சீராக இருக்கின்றதா அல்லது தடை பட்டு உள்ளதா ? என்று மருத்துவர்கள் தொடர்ந்து கண்கானிக்க தவறிய நிலையில், கட்டு இறுக்கமானதால் ரத்த ஓட்டம் தடை பட்டு மாணவிக்கு காலில் தீராத வலி ஏற்பட்ட பின்னர் 14 மணி நேரம் கழித்து மறு நாள் காலை 11 மணிக்கு அந்த கட்டை மருத்துவர்கள் அகற்றியதாக கூறப்படுகின்றது.
இதனால் காலில் ரத்த ஓட்டம் தடைபட்டு கடுமையான ரணமாக மாறி இரு தினங்களில் மாணவியின் கால் அழுகும் நிலை ஏற்பட்டதால் கடந்த 8 ந்தேதி அவரை மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கு ப்ரியாவை பரிசோதித்த மருத்துவர்கள், வலது கால் முட்டிக்கு கீழ் ரத்த ஓட்டம் செல்லாமல் அழுகி போயிருப்பதை கண்டு உடனடியாக வெட்டி அகற்றி உள்ளனர். தனது கால் அகற்றப்பட்டது தெரியாததால், தான் மீண்டும் எழுந்து வந்துவிடுவேன் என்று வாட்ஸ் அப்பில் நம்பிக்கையுடன் ஸ்டேட்டஸ் எல்லாம் வைத்திருந்தார் ப்ரியா
பிரியாவிற்கு காயம் எவ்வாறு உள்ளது என்பதை சோதனை செய்தபோது, காயம் அதிகரித்திருப்பதை கண்டு மீண்டும் அறுவை சிகிச்சை செய்ததாகவும், தசை கிழிந்ததால் அதிலிருந்து வெளியே வரக்கூடிய திரவ வடிவிலான மையோகுளோனஸ் என்ற திரவம் சிறுநீரகம் வழியாக திரவம் வெளியேற முடியாமல், ரத்தத்தில் கலந்ததால், ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, ஒவ்வொரு உறுப்புகளாக செயலிழந்து மாணவி உயிரிழந்ததாக மருத்துவமனை டீன் தேரனி ராஜன் தெரிவித்தார்
செவ்வாய் கிழமை அதிகாலை 2 மணிக்கு தனது தாய் தந்தை மற்றும் சகோதரனை ஏக்கத்துடன் பார்த்தபடியே கடைசியாக கண்ணை மூடி இருக்கிறார் ப்ரியா..!
ப்ரியாவின் உயிரற்ற உடலை பார்த்து தோழிகள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்
இதற்கிடையே கவனக்குறைவாக சிகிச்சை அளித்த பெரியார் நகர் அரசு மருத்துவமனையின் இரு மருத்துவர்களும் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்
மாணவி ப்ரியாவின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
Comments