காதலை முறித்த கையோடு காதலனின் கைகால்களை முறிக்க உத்தரவிட்ட காதலி..! குறுக்கே பாய்ந்த கவுசிக்ஸ்

0 30996

காதலிக்கும் போது கொடுத்த பரிசுகளை திருப்பிக்கேட்ட பழைய காதலனை, கல்லூரி மாணவி ஒருவர் கூலிப்படையை வைத்து தாக்கிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. காதலை முறித்த கையோடு காதலனின் கைகால்களை முறிக்க ஆட்களை ஏவிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

கன்னியாகுமரி மாவட்டம் வேர்கிளம்பியை அடுத்த மாத்தார் பகுதியை சேர்ந்தவர் பிரவின். டிப்ளமோ முடித்து வெல்டராக பணியாற்றும் இவரும், அணக்கரை பகுதியை சேர்ந்த 19-வயதான ஜெஸ்லின் என்ற கல்லூரி மாணவியும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதலித்து வந்தனர்.

நேரில் சந்தித்த பின்னர் காதலர்கள் ஒருவருக்கொருவர் நெருங்கி பழகிய நிலையில் ஜெஸ்லின் தனது வீட்டிற்கு வந்து பெண் கேட்கும் படி பிரவினிடம் கூறியுள்ளார். பிரவினும் தனது பெற்றோருடன் சென்று ஜெஸ்லின் வீட்டில் பெண் கேட்டுள்ளார். இதில் இரு வீட்டாரும் சம்மதித்த நிலையில் இரண்டு வருடத்திற்கு பின் திருமணம் செய்து வைக்கலாம் என ஜெஸ்லின் வீட்டார் கூறியுள்ளனர்.

இரு வீட்டார் சம்மதத்துடன் காதல் ஜோடியாக இருவரும் தனிமையாக கணவன் மனைவி போல் பல்வேறு இடங்களுக்கு சுற்றி திரிந்து மாறி மாறி பரிசு பொருட்களை வழங்கி தங்கள் காதலுக்கு வலுசேர்த்துள்ளனர்.

இந்த நிலையில் திடீரென ஜெஸ்லின் கடந்த ஒரு மாதமாக பிரவின் உடனான தொடர்பை மெல்ல மெல்ல விலக்கி கொள்ள அவரது நடத்தையில் சந்தேகமடைந்த பிரவின் அவரை கண்காணிக்க தொடங்கியுள்ளார். ஜெஸ்லின் தனது பக்கத்து வீட்டை சேர்ந்த டிரைவர் ஜெனித் என்பவருடன் தொடர்பில் இருப்பதையும் அவருடன் பைக்கில் சுற்றி திரிவதையும் கண்ட பிரவின், ஜெஸ்லினை கண்டித்துள்ளார்

இதில் ஆத்திரமடைந்த ஜெஸ்லின் , தான் தற்போது ஜெனித் ஐ காதலித்து வருவதாகவும் அவரை திருமணம் செய்து கொள்ள போவதாகவும் கூறியதோடு என்னை மறந்து விடு என்று கூறி காதலை முறித்துள்ளார் . மனமுடைந்த பிரவினோ, ஜெஸ்லினை மறக்க முடியாமல், தான் கொடுத்த பரிசு பொருட்களை எல்லாம் திரும்ப கொடு என்று கேட்டுள்ளார் . பரிசு பொருட்களை திரும்ப தருவதாக ஜெஸ்லின் கூறிச்சென்றுள்ளார்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை முன்னாள் காதலன் பிரவின் ஐ செல்போனில் அழைத்த ஜெஸ்லின், பரிசு பொருட்களை தருகிறேன் வேர்கிளம்பி பகுதிக்கு வா என்று அழைத்துள்ளார். அதனை நம்பி இருசக்கர வாகனத்தில் வந்த பிரவினை, வெறுப்பேற்றும் விதமாக புதிய காதலன் ஜெனித்துடன் இருசக்கர வாகனத்தில் வந்த ஜெஸ்லின் பரிசு பொருட்களை எல்லாம் தரமுடியாது ஓடி போய்விடு என்று மிரட்டியதாக கூறப்படுகின்றது.

சீனி மிட்டாய்க்கு அடம் பிடிக்கும் சின்ன பிள்ளை போல , ஜெஸ்லினிடம் பரிசு பொருட்களை திரும்பக்கேட்டபடியே பிரவீன் பைக்கில் பின் தொடர்ந்துள்ளான் . அப்போது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த இரு கூலிப்படை ஆசாமிகள் பிரவினின் இருசக்கர வாகனத்தை மோதி கீழே தள்ளி விட்டு பிரவினை சரமாரியாக தாக்கி உள்ளனர்.

இதனை ஜெஸ்லின் தனது புதிய காதலன் ஜெனித்துடன் இருசக்கர வாகனத்தில் இருந்தபடியே வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார். அங்கு திரண்ட பொதுமக்கள் காயமடைந்த பிரவினை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து பிரவின் சிசிடிவி ஆதாரங்களுடன் கொற்றிக்கோடு காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

கல்லூரி மாணவி ஜெஸ்லின், பக்கத்து வீட்டு காதலன் ஜெனித் கூலிப்படையை சேர்ந்த 2-பேர் என நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் தலை மறைவாக இருக்கும் அவர்களை தேடிவருகின்றனர்.காதலை முறித்த கையோடு காதலனின் கைகால்களை முறிக்க கல்லூரி மாணவி ஆட்களை ஏவிய சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments