இரும்பு கேட்டில் பாய்ந்த மின்சாரம்.. தம்பதி அடுத்தடுத்து உயிரிழந்த சோகம்.. மழைக்காலங்களில் மின்சாதனங்களை கவனமாக கையாளுவோம்..!

0 4799

சென்னை கோடம்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பின் கேட்டில் பொருத்தப்பட்டிருந்த மின்விளக்கிற்கு செல்லும் மின்சார ஒயரில் மின்கசிவு ஏற்பட்டு, ஈரமாக இருந்த இரும்பு கேட்டில் மின்சாரம் பாய்ந்ததில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் தம்பதியினர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

கோடம்பாக்கம் ரத்தினம்மாள் தெருவில், பிரவுன் ஸ்டோன் பவுண்டேஷன் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் 6 வீடுகள் உள்ளன. தரைதளத்தில் உள்ள வீட்டில் 78 வயதான மூர்த்தி மற்றும் அவரது மனைவி 76 வயதான பானுமதி ஆகியோர் வசித்து வந்தனர்.

2ஆவது மாடியில் உள்ள வீட்டில், வெங்கட்ராமன் என்பவர் வசித்து வருகிறார். எஞ்சிய 4 வீடுகளில் யாரும் இல்லை.

மின்சாரம் தாக்கி பலியான, மூர்த்தி வருமான வரித்துறையில் அதிகாரியாகவும், அவரது மனைவி தடய அறிவியல் துறையில் துணை கண்காணிப்பாளராகவும் பணியாற்றி ஓய்வுபெற்றவர்கள்.

குழந்தைகள் இல்லாததால் இருவரும் தனியாக வசித்துவந்த நிலையில், நேற்று இரவு 11 மணி அளவில், அடுக்குமாடி குடியிருப்பின் வெளிப்புற கேட்டை பூட்டுவதற்காக மூர்த்தி சென்றுள்ளார்.

கேட்டின் மீது பொருத்தப்பட்டிருந்த மின்விளக்கிற்கு செல்லும் ஒயரில் மின்கசிவு ஏற்பட்டு, மழை பெய்து ஈரமாக இருந்ததால் கேட்டு முழுவதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனை அறியாமல் கேட்டை பூட்ட முற்பட்டபோது மூர்த்தியை மின்சாரம் தாக்கியது.

கணவர் வராததால் அவரை தேடி வந்த மனைவி பானுமதி, கேட்டில் தொங்கியபடி இருந்த கணவரை காப்பாற்ற முயற்பட்டபோது அவரையும் மின்சாரம் தாக்கியது.

அந்த நேரத்தில் இவர்களை யாரும் கவனிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. பின்னர், எதிர் வீட்டில் வசிக்கும் பிரசன்னா என்பவர் தனது குடும்பத்துடன் வெளியில் சென்றுவிட்டு இரவு 11 மணியளவில் வீடு திரும்பியுள்ளார்.

அப்போது, எதிர்வீட்டின் கேட்டில் கணவன், மனைவி இருவரும் தொங்கிக் கொண்டிருந்ததை பார்த்து, அவர் சற்று எச்சரிக்கையுடன் கேட்டை தொட முயன்ற போது மின்சாரம் அவர் மீதும் தாக்கியுள்ளது.

சுதாரித்துக்கொண்ட அவர் கூச்சலிட்டதையடுத்து அருகில் உள்ள வீடுகளில் இருந்து வந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில், அசோக் நகர் போலீசார் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, மின் இணைப்பை துண்டித்து இருவரையும் மீட்டுள்ளனர்.

உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு பரிசோதித்ததில் கணவன் மனைவி இருவருமே ஏற்கனவே உயிரிழந்துவிட்டது தெரியவந்தது. இதனையடுத்து இருவரது உடலும் உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments