போதையில் காரில் படுத்து உறங்கியவருக்கு ரூ.10,000 அபராதம்..! காரைப் பறிகொடுத்த ஓட்டுனர்..!

0 9266
போதையில் காரில் படுத்து உறங்கியவருக்கு ரூ.10,000 அபராதம்..! காரைப் பறிகொடுத்த ஓட்டுனர்..!

தேவகோட்டையில் காரில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த ஓலா கார் ஓட்டுனரை நள்ளிரவில் எழுப்பித் தாக்கியதுடன், குடித்துவிட்டு கார் ஓட்டியதாகக் கூறி 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்தவர் தொழிலதிபர் மெய்யப்பன். இவர் சென்னையில் குடும்பத்துடன் இருந்து வரும் நிலையில் தேவகோட்டைக்கு சென்றால் சென்னையை சேர்ந்த சக்திவேல் என்பவரது ஓலா காரை வாடகைக்கு அழைத்து பயன்படுத்துவது வழக்கம்.

அந்தவகையில் அண்மையில் தேவகோட்டை வந்திருந்த மெய்யப்பன் சக்திவேலின் ஓலா காரை 3ம் தேதி கோவில்களுக்கு சென்று வருவதற்காக முன்பதிவு செய்துள்ளார். இதையடுத்து சென்னையில் இருந்து புறப்பட்ட ஓட்டுனர் சக்திவேல் கடந்த 2ஆம் தேதி தேதி இரவு 10.30 மணி தேவகோட்டைக்கு சென்று விட்டார். 3ஆம் தேதி காலை 7 மணிக்கு தான் சவாரி என்பதால், மது அருந்திவிட்டு ராம்நகர் பேருந்து நிறுத்தம் அருகே சாலையோரம் படுத்து உறங்கி உள்ளார்.

அப்பொழுது 12 மணி அளவில் சட்டம் ஒழுங்கு உதவி காவல் ஆய்வாளர் ஒருவர் வந்து காரில் இருந்த சக்திவேலை எழுப்பி விசாரித்ததாகவும், அதன் பின்பு நள்ளிரவு 1:30 மணி அளவில் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன் மற்றும் காவலர் இளங்கோ ஆகியோர் சாதாரண உடையில் வந்து சக்திவேலை எழுப்பி விசாரித்ததாகவும் கூறப்படுகின்றது.

தான் காலையில் தொழில் அதிபர் மெய்யப்பன் வீட்டிற்கு சவாரிக்கு செல்வதற்காக வந்துள்ளதாக சக்திவேல் கூறியதை தொடர்ந்து, மெய்யப்பனுக்கு தொலைபேசியில் தொடர்பு கொள்ள கூறியதாகவும், அதற்கு நள்ளிரவு நேரத்தில் எனது வாடிக்கையாளரை தொந்தரவு செய்ய முடியாது என்று கூறியதாகவும் தெரிகிறது.

இதனால் டிரைவர் சக்திவேலுக்கும் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் ராமச்சந்திரனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதில் அவர்கள் சக்திவேலை தாக்கி செல்போனை பறித்துக் கொண்டு தாங்கள் வந்த டெம்போ ட்ராவலர் வேனில் ஏற்றி நகர காவல் நிலையம் அழைத்துச் சென்றதாக கூறப்படுகின்றது.

குடித்துவிட்டு கார் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்ததாக கூறி 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததாகவும், அபராத தொகையை செலுத்தி விட்டு காரை எடுத்துச்செல்லுமாறு கார் சாவியையும் வாங்கி வைத்துக் கொண்டதாக குற்றஞ்சாட்டி உள்ள ஓட்டுனர் சக்திவேல், தாக்குதலில் காயம் அடைந்ததாக கூறி தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சக்திவேலின் கார் இரவு 10:28 மணியில் இருந்து நள்ளிரவு 1.56 வரை ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டு உள்ளதாக ஜிபிஎஸ் கருவி மூலம் தெரியவந்த நிலையில் உறங்கியவர் மீது எப்படி குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக வழக்கு போடப்பட்டது என்று தேவகோட்டை நகர காவல் ஆய்வாளர் சரவணனிடம் கேட்ட பொழுது, சக்திவேல் சென்னையில் இருந்து குடித்துவிட்டு காரை ஓட்டி வந்ததாகவும், அதனால் அவர் மீது குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக வினோத விளக்கம் அளித்ததோடு அபராத தொகையை கட்டினால் மட்டும் கார் தரப்படும் என்று அவரை அனுப்பி வைத்ததாகவும் ஒப்புக் கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக காவல் உயர் அதிகாரிகள் விசாரித்து உரிய தீர்வு காணவேண்டும் என்பதே ஓட்டுனர்களின் கோரிக்கையாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments