மகளின் கல்லறையில் காதலனை கொன்று புதைத்த ஆவேச தந்தை...

0 6728

காதலில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட மகளின் உயிரிழப்புக்கு பழிக்குப்பழி வாங்கும் விதமாக, காதலனைக் கொலை செய்து மகளின் கல்லறைக்கு  அருகிலேயே புதைத்த பெண்ணின் தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். 

ஆந்திர மாநிலம் ஏலூரூ மாவட்டத்தில் உள்ள துருல லட்சுமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர் பவன் கல்யாண். இவரும் ஜங்காரெட்டிகூடத்தை சேர்ந்த நாகேஸ்வரராவ் என்பவரின் 18 வயது மகள் சியாமளாவும் ஒரே கல்லூரியில் படித்து வந்தபோது அவர்களுக்கிடையே காதல் மலர்ந்தது.

பல இடங்களுக்கு ஒன்றாகச் சுற்றிவந்த இந்த காதல் பறவைகள், திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, தங்களுடைய காதல் குறித்து குடும்பத்தாரிடம் தெரிவித்தனர்.

இருவரும் வெவ்வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் திருமணத்திற்கு பெற்றோர் சம்மதிக்கவில்லை. அவர்களின் காதலுக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. கடந்த ஜூன் மாதம் காதலனை மறக்க இயலாத மனவேதனையில் இருந்த சியாமளா பூச்சி மருந்து குடித்துத் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில் கடந்த 15 ஆம் தேதி பவன் கல்யாண் நண்பர்கள் அளித்த விருந்து ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்றவர் அதன்பின் வீடு திரும்பாமல் மாயமானார்.

இது பற்றி பவன் கல்யாண் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஜங்காரட்டி கூடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது 15ஆம் தேதி பவன் கல்யாணை அவரது காதலியின் தந்தையான நாகேஸ்வர ராவ் அழைத்துச் சென்றது தெரிய வந்தது. எனவே நாகேஸ்வரராவை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாயின.

தனது மகளின் மனதை கெடுத்து காதலில் விழவைத்து, அவரது உயிரிழப்புக்கு காதலன் பவன்கல்யான் தான் காரணம் என்று பெருங்கோபத்தில் இருந்த நாகேஸ்வரராவ், சம்பவத்தன்று பவன் கல்யாணை நைசாக பேசி வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து பவனின் கை,கால்களை கட்டி கடுமையாக தாக்கிக் கொலை செய்துள்ளார்.

அப்போதும் ஆத்திரம் தீராத நாகேஸ்வரராவ், அவருடைய உடலை தனது மகள் சியாமளாவின் உடல் புதைக்கப்பட்ட கல்லறையில் அருகிலேயே புதைத்து விட்டதாக வாக்குமூலம் அளித்து அதிர வைத்துள்ளார்.

அங்கு சென்ற போலீசார் வருவாய் துறை அதிகாரிகள் முன்னிலையில் பவன் கல்யாண் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து நாகேஸ்வரராவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments