68 நிமிடங்களில் கோத்தகிரி டூ கோவை... குழந்தையின் சிகிச்சைக்காக விரைந்த வந்த ஆம்புலன்ஸ்..!

0 2442

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உடல்நலம் பாதித்த ஒரு பச்சிளம் குழந்தையை,  85 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கோவைக்கு ஒரு மணி நேரத்தில் கொண்டு வந்துள்ளார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவர். வழியெங்கும் போக்குவரத்து நெரிசலில் வாகனம் சிக்காமல் இருக்க 8 ஆம்புலன்ஸ்களும் உடன் அணிவகுத்து வந்தன.

நீலகிரி மாவட்டம் தாந்தநாட்டைச் சேர்ந்த டெண்யா- பவித்ரன் தம்பதிக்கு கோத்தகிரி தனியார் மருத்துவமனையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. கோத்தகிரியில் சிறப்பு வசதிகள் இல்லாததால் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் கொண்டு செல்லப்பட்டது.

ஆம்புலன்ஸ் வாகனத்தில் குழந்தை ஏற்றப்பட்ட பிறகு அதன் ஓட்டுனர் அக்கீம் என்பவர் கோத்தகிரியில் இருந்து கோவை தனியார் மருத்துவமனைக்கு 68 நிமிடங்களில் கொண்டுவந்து சேர்த்தார். இதற்காக வழியெங்கும் போக்குவரத்து நெரிசல் சீர்செய்யப்பட்டதுடன், ஆம்புலன்ஸ்க்கு முன்னும் பின்னும் 5 ஆம்புலன்ஸ்கள் கோவை எல்லை வரை அணிவகுத்து வந்தன.

கோவை எல்லையில் இருந்து 3 ஆம்புலன்ஸ் வாகனங்கள் அக்கீம் ஓட்டிவந்த ஆம்புலன்ஸ்க்கு முன்னும் பின்னும் மருத்துவமனை வரை உடன்வந்தன. இதனால் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ஆகக் கூடிய பயணநேரத்தைக் குறைத்து ஒரு மணி நேரத்திலேயே மருத்துவமனைக்கு குழந்தை அழைத்துவரப்பட்டது.

பச்சிளம் குழந்தை உடனடியாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உரிய நேரத்தில் சிகிச்சைக்கு அழைத்து வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு பொதுமக்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments