விவசாயி தோட்டத்து மின் இணைப்பை துண்டித்த திமுக கவுன்சிலர்.. பாதை பஞ்சாயத்தில் ஆவேசம்..!

0 3501

10 அடி நிலத்தை பாதைக்காக தானமாக எழுதித்தர மறுத்த விவசாயி ஒருவரின் மாந்தோப்புக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பை திமுக கவுன்சிலர் மின்கம்பத்தில் ஏறி துண்டித்த சம்பவம் கிருஷ்ணகிரி அருகே நிகழ்ந்துள்ளது...

கிருஷ்ணகிரி மாவட்டம் பந்தரவள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி மணி. இவர் தனக்கு சொந்தமான மாந்தோட்டத்திற்கு புதிய மின் இணைப்புக் கேட்டு விண்ணப்பித்துள்ளார். அப்போது பக்கத்து நிலத்தின் விவசாயி கண்ணன் என்பவருக்கு பாதைக்காக 10 அடியை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்குமாறு ஜிங்கல் கதிரம்பட்டி ஊராட்சியை சேர்ந்த திமுக கவுன்சிலர் ஐயப்பன் நிபந்தனை விதித்ததாக கூறப்படுகிறது. பாதையாக பயன்படுத்திக்கொள்ள மணி வாய்மொழியாக சம்மதித்ததால் அவருக்கு உடனடியாக மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பஞ்சாயத்து செய்த திமுக கவுன்சிலர் ஐயப்பன், மணியிடம் வந்து 10 அடி வழி பாதையை தானமாக கொடுத்தது போன்று பத்திரத்தில் எழுதி கொடுக்குமாறு வற்புறுத்தியதால், உஷாரான விவசாயி மணி இதற்கு சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகின்றது.

இதையடுத்து ஆத்திரம் அடைந்த திமுக கவுன்சிலர் அய்யப்பன், உயர் மின்னழுத்த மின் கம்பத்தில் ஏணியை வைத்து ஏறி , மின் இணைப்பு வயரை துண்டித்ததுடன், மின் வயர் மற்றும் கம்பத்தில் இருந்த கிளாம்புகளையும் கழட்டி எடுத்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக புகைப்பட ஆதாரத்துடன் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகிறார்கள். மின்சார வாரியத்திலும் மணி புகார் அளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments