மாமியாரை வெளியே தள்ளி சொத்தை அபகரிக்க முயன்ற மருமகள்

0 1484

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வயதான மாமியாரை வெளியே தள்ளி வீட்டை பூட்டி சொத்தை மருமகள் அபகரிக்க முயன்றது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த ஆசாரிப்பள்ளத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி உஷா. இவரது மகன் சதீஷ் மனைவி மாஷா மற்றும் 2 குழந்தைகளுடன் குவைத்தில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு மாஷா கடந்த 8 மாதங்களுக்கு முன் குவைத்தில் இருந்து தனது தாயார் வீட்டுக்கு வந்துள்ளார்.

இதையடுத்து தனது 2 குழந்தைகளையும் பார்க்க வேண்டும் என்று சதீஷ் பலமுறை கேட்டும் மாஷா அதற்கு அனுமதி அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கடுமையான மன அழுத்தத்தில் இருந்த சதீஷ் கடந்த 2 மாதங்களுக்கு முன் குவைத்தில் உயிரிழந்தார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த தாயார் உஷா, கடும் முயற்சிகள் மேற்கொண்டு மகனின் உடலை குவைத்தில் இருந்து அனந்த நகர் பகுதியில் உள்ள வீட்டிற்கு கொண்டு வந்துள்ளார். ஆனால் மாஷாவோ கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனிடையே சதீஷின் உடல் சொந்த வீட்டிற்கு கொண்டு வரப்பட்டதை அடுத்து மாஷா, குழந்தைகளுடன் கணவரை பார்ப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று போலீசாரை அழைத்துக் கொண்டு அங்கு சென்றுள்ளார். இறுதிச் சடங்கு முடிந்ததும் அங்கிருந்து தனது தாயார் வீட்டுக்கு சென்று விடுவேன் என மாஷா வாக்குறுதி அளித்ததாக கூறப்படுகிறது.

ஆனால் கணவனின் இறுதிச் சடங்கு முடிந்ததும் மாஷா அங்கிருந்து போகாமல் மாமியார் உஷாவை வீட்டை விட்டு வெளியே துரத்தி வீட்டையும் பூட்டி உள்ளார். மேலும் தனது தாய் தந்தையை அந்த வீட்டினுள் இருக்க அனுமதித்துள்ளார்.

இதனால் உண்ண உணவில்லாமல் வீட்டின் வெளியே தன்னந்தனியாக இருந்த மூதாட்டி உஷாவின் உடல்நிலை மோசமானதால் மூத்த மகள் அவரை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இந்த நிலையில் ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்தில் மூதாட்டி உஷா புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் தனது வீட்டில் தன்னையே உள்ளே அனுமதிக்காமல் மருமகள் வெளியே துரத்தி உள்ளார் என்றும் எனவே தன்னை உள்ளே அனுமதிக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க தெரிவித்திருந்தார்.

இதையடுத்து போலீசார் விசாரணைக்காக அங்கு சென்ற போது மாஷா கதவை திறக்காமல் உள்ளே இருந்துள்ளார். பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வீட்டின் கதவைத் திறந்து மாமியார் உஷாவை உள்ளே செல்ல அனுமதித்தனர்.

அப்போது வீட்டில் இருந்த பீரோ மற்றும் அதிலிருந்த வீட்டின் ஆவணங்கள், நகை, பணம் உள்ளிட்டவை காணாததை கண்ட மூதாட்டி உஷா அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கேட்ட போது மாஷா மற்றும் அவரது பெற்றோர் மூதாட்டியை தாக்க முயன்றதுடன் உள்ளே அனுமதிக்க முடியாது என்று கூறி போலீசாருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து போலீசார் மாமியார் மற்றும் மருமகளை வெளியே வர வைத்து வீட்டை பூட்டினர். மேலும் இருவரிடத்திலும் சமரச பேச்சுவார்த்தையில் காவல்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments