அதிவேக பைக் மோதி தாய்-சேய் பலி.. வயிறுமுட்ட குடித்திருந்த வாலிபர் தோழியுடன் கைது..

0 3428

சென்னையில் அதிகாலையில் சாலையை கடந்தபோது தாயும், 8 மாத குழந்தையும் அதிவேகமாக வந்த கே.டி.எம். மோட்டார் சைக்கிள் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர். வயிறு முழுக்க குடித்துவிட்டு மதுபோதையில்  மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த இளைஞரும், அவரது பெண் தோழியும் கைது செய்யப்பட்டனர்.

அரும்பாக்கம் என்.எஸ் கே. தெருவை சேர்ந்த சஞ்சீவ் காந்தி, அதே பகுதியில் ஸ்டிக்கர் கடை நடத்தி வருகிறார்.

கடையில் ஆயுத பூஜை கொண்டாடவும், அதற்கு முன்பாக  கணபதி ஹோமம் நடத்தவும் முடிவு செய்து, மனைவி பூங்குழலி, 6 வயது மகள், மற்றும் 8 மாத குழந்தையான  குழலி ஸ்ரீயுடன் காலை 4 மணியளவில் நடந்து சென்று கொண்டிருந்தார். 

அண்ணா நகர்  மூன்றாவது அவென்யூ அருகே சாலையை சஞ்சீவ் காந்தியும், 6 வயது மகளும் கடந்து சென்று விட்ட நிலையில், பின்னால் குழந்தையை தூக்கி வந்த பூங்குழலி மீது மின்னல் வேகத்தில் வந்த கேடிஎம் பைக் மோதியுள்ளது.

இதில் பூங்குழலியும், குழந்தையும் சுமார் 100 மீட்டர் தூரத்துக்கு இழுத்து செல்லப்பட்டனர். 

பூங்குழலி தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். குழந்தை  கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு  கொண்டு செல்லப்பட்ட நிலையில் பலியானது. 

அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார்  விசாரணை நடத்தியதில், பைக்கை ஓட்டியது  அரும்பாக்கத்தை சேர்ந்த ஐஐடி புராஜக்ட் அசோசியேட் நிஹால் என்பதும், அவருடன் இருந்தது பெண்  தோழி கிருத்திகா என்பதும் கண்டறியப்பட்டது. 

இரவு நேர விருந்தில் வயிறு முட்ட மது குடித்த நிஹால், நண்பர் வீட்டில் இருந்ததாக கூறப்படும்  கிருத்திகாவை  பைக்கில் அழைத்து வந்ததும், அப்போது அவரை வேகமாக  ஓட்டும்படி கிருத்திகா உற்சாகபடுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து  2 பேர் மீதும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டுதல், கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி மரணம் விளைவித்தல்,  மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல், மனித உயிருக்கு அபாயம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளுதல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

சஞ்சீவ் மற்றும் பூங்குழலிக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை பிறந்து உடல் நலக்கோளாறால் உயிரிழந்துள்ளது.

பல ஆண்டுகளுக்கு பின் 2-வதாக பெண் குழந்தை பிறந்த நிலையில், அதற்கு எதுவும் ஆகக்கூடாது எனவும், குடும்ப மற்றும் தொழில் விருத்திக்காகவும் கணபதி பூஜை நடத்த திட்டமிட்டு செல்லும் போது நேரிட்ட விபத்தில் 2 பேரும் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments