பிரதமர் மோடி இன்று முதல் 3 நாள் குஜராத் பயணம்

பிரதமர் நரேந்திரமோடி மூன்று நாள் பயணமாக குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசத்திற்கு இன்று செல்கிறார். இந்தியாவின் முதல் சூரிய மின்னாற்றல் கிராமம் உள்ளிட்ட 14 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்புடைய பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருக்கிறார்.
மூன்றுநாள் பயணமாக இன்று குஜராத் செல்லும் பிரதமர் மோடி அங்கு 14 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்புடைய திட்டங்களை தொடங்கி வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். குஜராத் மாநிலம் மோதெராவில் இன்றுமாலை நடைபெறும் நிகழ்ச்சியல் இந்தியாவின் முதல் சூரிய மின்னாற்றலால் இயங்கும் கிராமத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
தொடர்ந்து இன்று இரவு மோதேஸ்வரி தேவி ஆலயத்திலும் சூரியன் கோவிலிலும் பிரதமர் தரிசனம் செய்ய உள்ளார். இரவு நேரத்தில், பின்னணி இசையுடன், வண்ண ஒளியில் சூரியன் கோயில் ஜொலிக்கும் காட்சிகள் வெளியிடப்பட்டது.
நாளை காலை பரூச்சில் நடைபெறும் விழாவில் பல்வேறு திட்டங்களை மோடி தொடங்கி வைக்கிறார்.பிற்பகல் அகமதாபாதிலும் மாலை ஜாம் நகரிலும் புதிய திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்ட உள்ளார். 11ம் தேதி காலை அகமதாபாத் சிவில் மருத்துவமனையில் பல திட்டங்களை அவர் அடிக்கல் நாட்ட உள்ளார்.
தொடர்ந்து மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜைனிக்குப் பயணிக்க உள்ள பிரதமர் மோடி அங்கு மாகாளேஸ்வர் ஆலயத்தில் கால பைரவரை வழிபாடு செய்கிறார்.11ம் தேதி இரவு உஜ்ஜைனில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். பிரதமரின் வருகையை ஒட்டி குஜராத் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Comments