‘புல்’ தடுக்கி பயில்வானால் தூக்கத்தை தொலைத்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள்..! ஓவர் ஓவர்... ஓவரோ ஓவர்..!

0 3438

திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் அருகே சாலையோரம் விபத்தில் ஒருவர் அடிபட்டுக்கிடப்பதாக 108 ஆம்புலன்சுக்கு பேருந்து பயணி ஒருவர் தகவல் தெரிவித்த நிலையில், நள்ளிரவில் விரைந்து சென்ற ஆம்புலன்ஸ் ஊழியர்கள் முழுபோதை ஆசாமியிடம் சிக்கி நொந்து போன சம்பவம் அரங்கேறி உள்ளது

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், கருக்காம்பட்டி நான்கு வழிச்சாலை பிரிவில் பேருந்தில் இருந்து கீழே விழுந்து ஒருவர் மயங்கி உயிருக்கு போராடுவதாக நள்ளிரவில் 108 ஆம்புலன்சுக்கு அவசர தகவல் ஒன்று வந்தது

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் விரைந்து சென்ற மருத்துவ பணியாளர்கள்  அங்கு படுத்து கிடந்தவரை எழுப்பினர்

அந்த ஆசாமியோ , எட்டுக்கு பத்து ஏசி ரூமில் இளையராஜாவின் தாலாட்டில் மயங்கி தூங்குவது போல, கொசுக்கடிக்கு கலங்காமல், கையை தலையணையாக்கி கச்சிதமாக உறங்கிக் கொண்டிருந்தார்

ஒருவழியாக அவரை தட்டி எழுப்பிய நிலையில் அவர் விபத்தில் அடிபட்டவர் அல்ல, ‘புல்’லாக மது அருந்தி விட்டு புல் தரையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த முழு போதை முருகேசன் என்பது தெரியவந்தது

நல்லா போதையை போட்டு விட்டு, வீதியில் படுத்தால், வீட்டுக்கு கூட்டிட்டுபோக ஆம்புலன்ஸ் என்ன அரைபாடி வண்டியாடா ? என்று ஒருவர் ஆதங்கமாக கேட்க, தான் ஆம்புலன்ஸை அழைக்கவில்லை என்று கூறிய அந்த குடிமகர் , தன்னிடம் செல்போன் கூட கிடையாது என்றும் கூறினார்


108க்கு தகவல் தெரிவித்த நபரை தொடர்பு கொண்ட போது, தான் பேருந்தில் சென்ற போது அந்த நபர் புல் தரையில் விழுந்ததை வைத்து பேருந்தில் இருந்து இறங்கும் போது விழுந்து இருக்கலாம் என்று நினைத்து தகவல் தெரிவித்து விட்டதாக கூறினார்.

இதையடுத்து நள்ளிரவில் போதை கலைந்த விரக்தியில் அந்த மதுப்பிரியரும், தூக்கம் தொலைத்த விரக்தியில் ஆம்புலன்ஸ் ஊழியரும் கவலையுடன் சாலையோரம் குத்தவைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

108 ஆம்புலன்ஸ்... உயிர் காக்கும் உன்னதமான சேவையை அளித்து வருகின்றது.

உறுதிபடுத்தப்படாத தகவல்களை 108 ஆம்புலன்ஸ் சேவை மையத்திற்கு தெரிவிப்பதை மக்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டும் இல்லையேல் மற்றொரு உயிரை காக்கும் உன்னதமான நேரம் வீணடிக்கப்பட்டுவிடும்..! என்று அறிவுறுத்துகின்றனர் காவல்துறையினர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments