பொண்ணு தன் ஜாடை இல்லைன்னு டெயிலர் செய்த விபரீதம்..! வாளியில் அடைத்து பரணில் வைத்த கொடூரம்.!

0 4186

மதுரையில் 8 வயது சிறுமியை கொலை செய்து துணியில் சுற்றி வாளிக்குள் அடைத்து, சடலத்தை வீட்டு பரணில் வைத்து விட்டு தலைமறைவான  தந்தையை போலீசார் தேடி வருகின்றனர். மகள் தனது ஜாடையில் இல்லை என்பதற்காக நிகழ்த்தப்பட்ட கொடூர சம்பவத்தின் திகில் பின்னனி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

மதுரை ஜெய்ஹிந்த்புரம் அடுத்த சோலை அழகுபுரத்தை சேர்ந்தவர் டெயிலர் காளிமுத்து. இவரது மனைவி பிரியதர்ஷினி இவர்களுக்கு எட்டு வயதில் தன்ஷிகா என்ற மகள் இருந்தாள்.

பிரியதர்ஷினி பாத்திரக்கடை ஒன்றில் வேலைப்பார்த்து வந்த நிலையில் கடந்த 13 ந்தேதி காளிமுத்து தனது மகள் தன்ஷிகாவுடன் சிவகங்கையில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறிச்சென்றார். பிரியதர்ஷினி வேலைக்கு சென்று விட்டு திரும்பி வந்த பின்னரும் கணவரும் மகளும் வீட்டிற்கு திரும்பவில்லை. கணவரின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தனது கணவரையும் , மகளையும் காணவில்லை என்று பிரியதர்ஷினி ஜெய்ஹிந்த் புரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் அந்த புகாரை விசாரிக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இந்த நிலையில் பிரியதர்ஷினியின் வீட்டில் இருந்து துர் நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்ததால் அவர் காவல்துறையினர் உதவியுடன் வீட்டில் பரண் மீது இருந்த வாளியை கீழே இறக்கி பார்த்தார்

அதில் துணியில் சுற்றப்பட்ட நிலையில் சிறுமி தன்ஷிகா அழுகிய நிலையில் சடலமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். போலீசார் பிரியதர்ஷினியிடம் விசாரித்த போது கணவர் காளிமுத்துவின் சந்தேகக் கொடுமை வெளிச்சத்திற்கு வந்தது.

தினமும் கடையில் இருந்து வந்ததும் பிரியதர்ஷினியின் செல்போனை வாங்கிப்பார்க்கும் காளி முத்து, இன்னைக்கு யார் ? யாரிடம் ? பேசினாய் என்று கேட்டு அடித்து துன்புறுத்துவதை வாடிக்கையாக்கி இருந்துள்ளார். தனது மகளுக்கு 8 வயதாகும் நிலையில், மகள் பிறந்ததில் இருந்தே அவளது பிறப்பில் சந்தேகம் கொண்டு தகராறு செய்து வந்த காளிமுத்து, மகளின் முக ஜாடை தன்னை போல இல்லை என்று கூறி துன்புறுத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில் தான் மகளை உறவினர் வீட்டுக்கு அழைத்துச்செல்வதாக கூறி ஏமாற்றிவிட்டு வீட்டில் வைத்தே மகளை கொலை செய்த காளி முத்து, சடலத்தை துணியில் சுற்றி வாளியில் அடைத்து பரண் மீது மறைத்து வைத்துவிட்டு தலைமறைவாகி இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து தலைமறைவான காளிமுத்துவை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

அதே நேரத்தில் சில தினங்களாக லேசாக துர் நாற்றம் வீசிய போது ஏதோ எலி செத்துக்கிடக்கும் என்று நினைத்து கண்டுகொள்ளாமல் இருந்ததாக தெரிவித்த பிரியதர்ஷினியிடமும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments