இந்த மின் வெட்டுக்கு அணில் காரணமல்ல அய்யா தான் காரணம்..! இருளில் மூழ்கிய 25 கிராமங்கள்.!

0 3745

சாத்தான்குளம் அருகே மதுபோதையில் மின் இணைப்பை துண்டித்து விட்டு எழுந்திருக்க இயலாமல் கிடந்த மின் ஊழியரால் 25க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கிய சம்பவம் அரங்கேறி உள்ளது...

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள பழனியப்பபுரம் பகுதியில் துணை மின் நிலையம் உள்ளது. இங்கிருந்து பேய்க்குளம், பழனியப்பபுரம், கட்டாரிமங்கலம், அறிவான்மொழி, பனைகுளம் உள்பட 25க்கும் மேற்பட்ட குக்கிராமங்களுக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு சுமார் 10 மணிக்கு ஏற்பட்ட மின்வெட்டுக்காரணமாக இந்த 25க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கியது. மின்சாரம் கொஞ்ச நேரத்தில் வந்துவிடும் என்று காத்திருந்த மக்கள் ஒரு மணி நேரமாகியும் மின்சாரம் வராததால் உள்ளூர் மின் ஊழியரை எப்போது மின்சாரம் வரும் எனக்கேட்டு மொய்க்க ஆரம்பித்தனர்.

இதையடுத்து உள்ளூர் மின் ஊழியர்கள் பழனியப்பபுரம் துணைமின் நிலையத்துக்கு மக்களுடன் புறப்பட்டுச்சென்றனர். அங்கு சென்று பார்த்தால் மின் வெட்டுக்கு காரணம் அணில் அல்ல அங்கு மின் ஊழியராக பணியாற்றி வரும் அறிவான்மொழி கிராமத்தைச் சேர்ந்த பாலசுந்தரம் என்பது தெரியவந்தது. மின்சாரத்தை ஆன் செய்ய வேண்டிய பாலசுந்தரம் மூக்கு முட்ட குடித்துவிட்டு மது போதையில் குப்புற படுத்துக்கிடந்ததால் மின்சாரம் தடைப்பட்டதை கண்டுபிடித்தனர்

இரவு 10 மணிக்கு லைன் மாற்றி விடுவதற்காக மின்சாரத்தை துண்டித்த பாலசுந்தரம், போதையில் அப்படியே குப்புறப் படுத்து உறங்கியதை கண்டு மக்கள் நொந்து போயினர். சக ஊழியர் ஒருவரை வீட்டில் இருந்து அழைத்து வந்து மின்சாரத்தை ஆன் செய்து மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது...

இவ்வளவு களேபாரங்களுக்கும் நடுவில் அங்கு போதையில் கிடந்த பாலசுந்தரத்தை பொதுமக்கள் எழுப்ப முயற்சித்தனர். அவர் போதை கண்ட இடம் சொர்க்கம் என்பது போல எழுந்திருக்க மறுத்து அங்கேயே படுத்துக் கிடந்தார்...

மிகவும் எச்சரிக்கையாக பணி செய்ய வேண்டிய மின் நிலையத்தில் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் போதையில் உருண்ட ஊழியர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments