கணவனின் காதலுக்கு மரியாதை செய்த மனைவி.. ஒத்தரோசா இரட்டைரோசாவானது..!

0 11705

திருப்பதியை சேர்ந்த பெண் ஒருவர் கணவனை வெறித்தனமாக காதலித்த முன்னாள் காதலியை அவருக்கு 2 வது திருமணம் செய்து வைத்து காதலுக்கு மரியாதை செய்துள்ளார். நேர்மையான அணுகுமுறைக்காக வாழ்க்கையில் பங்கு கொடுத்த சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

திருப்பதி மாவட்டம் டக்கிலி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த டிக் டாக் பிரபலம் கல்யாண். டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டதன் மூலம் இவருக்கு கடப்பாவை சேர்ந்த விமலா என்பவருடன் காதல் மலர்ந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து இருவரும் இணைந்து உருவாக்கிய டிக்டாக் மற்றும் இன்ஸ்டா ரீல்ஸ் வீடியோக்களால் அதிக பிரபலம் அடைந்தனர்.

இந்த நிலையில் விமலாவை சந்திக்க விசாகப்பட்டினத்தை சேர்ந்த நிதியஸ்ரீ என்ற பெண் வந்தார், உங்கள் கணவனின் முன்னாள் காதலி என்று அறிமுகப்படுத்திக் கொண்டு தங்கள் பிரேக் அப் கதையை விமலாவிடம் எடுத்து கூறி உள்ளார்.

தாங்கள் இருவரும் ஆரம்பத்தில் டிக்டாக் மூலம் பழகி காதலித்து வந்ததாகவும் தனிப்பட்ட சில காரணங்களால் அவருடன் பேசுவதை தான் நிறுத்திய நிலையில் அவரது தொடர்பு எண்ணை தவறவிட்டதால் அதன் பின் அவரை தொடர்பு கொள்ள இயலாமல் போனதாகவும், இதனால் அவர் தன்னை மறந்து விட்டதாகவும், இந்த சூழ் நிலையில் தான் அவர் உங்களை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார் என நிதிய ஸ்ரீ தெரிவித்துள்ளார்.

நீண்ட தேடுதலுக்கு பின்னர் அவரது முகவரியை தேடிக் கண்டுபிடித்ததாகவும், அவருக்கு திருமணமானது தெரியவந்ததும், அவரிடம் பேசுவது சரியாக இருக்காது என்பதால் உங்களிடம் பேசுகிறேன் என்று விமலாவிடம் உருக்கமாக பேசிய நித்யஸ்ரீ..!

விமலாவிடம் இருந்து விடை பெறுவதற்கு முன்பாக , தான் இப்போதும் அவர் மீது வெறித்தனமான அன்பு வைத்திருக்கிறேன்... என்னால் அவரை விட்டு பிரிந்து செல்ல முடியவில்லை என்று கதறி அழுதுள்ளார். விமலாவின் இரு கைகளையும் பிடித்துக் கொண்டு எப்படியாவது எங்களை ஒன்று சேர்த்து வையுங்கள் என்று கெஞ்சி உள்ளார்.

இதையடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் விழித்த விமலா, எந்த மனைவியும் செய்யத்துணியாத தியாகத்தை நித்யஸ்ரீயின் நேர்மையான அணுகுமுறைக்காக செய்யத்துணிந்தார். தனது கணவரை அழைத்து பேசி நிலவரத்தை எடுத்துக் கூறிய விமலா , முன்னாள் காதலி நித்யஸ்ரீயை திருமணம் செய்து வைக்க தயாரானார். திருமணத்திற்கு பின்னர் தானும் அவர்களுடன் இருக்க வேண்டும் என்று சத்தியம் வாங்கி கொண்டு நித்யஸ்ரீயை கணவருக்கு கரம் பிடித்துக் கொடுத்து காதலுக்கு மரியாதை செய்தார்.

கணவருக்கு 2 வது திருமணம் செய்து வைத்து வாழ்க்கையை பங்கு போட்டுக் கொண்ட விமலாவின் முடிவுக்கு உறவினர்களில் பலர் எதிர்ப்பு தெரிவித்தாலும் திருமண ஏற்பாடுகள் அனைத்தையும் முதல் மனைவி விமலாவே முன்னின்று கவனித்தது கணவனையும் காதலியையும் கோவிலுக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்து வைத்ததோடு அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

ஒத்தரோசா... ரெட்ட ரோசாவான நிலையில் அவர்களை மணம் முடித்த காதல் ராசா ஏற்கனவே வசித்து வந்த இடத்தில் இருந்து மாற்று இடம் தேடிச்சென்று விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் சில நேரங்களில் சில மனிதர்களால் கிளைமேக்ஸில் டுவிஸ்ட் நிகழும் என்பதற்கு இந்தச்சம்பவமே சாட்சி..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments