கஞ்சாவுக்கு அடிமை மாணவர்கள்; கன்னியாகுமரி எஸ்.பி தகுந்த நடவடிக்கை.!

கன்னியாகுமரியில் கஞ்சா போதைக்கு அடிமையான 12ம் வகுப்பு மாணவனையும், கல்லூரி மாணவனையும் அம்மாவட்ட எஸ்.பி ஹரிகிரண் பிரசாத் போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்தார்.
புத்தேரியைச் சேர்ந்த அந்த 12ம் வகுப்பு மாணவனை ஒரு கும்பல் தாக்கியது. இது குறித்து போலீசார் விசாரித்ததில், கஞ்சா போதைக்கு அடிமையான மாணவன் பொதுமக்களை தகாத வார்த்தைகளால் திட்டியதால் அந்த கும்பல் தாக்கியது தெரியவந்தது. அதோடு, மாணவன் நண்பர்களுடன் சேர்ந்து கஞ்சா அடித்த வீடியோக்களும் வெளியானது.
அந்த வீடியோவில் இருந்த 2 பேர் போலீசாரிடம் சிக்கிய நிலையில், இருவரையும் நேரில் அழைத்து அறிவுரை கூறிய மாவட்ட எஸ்.பி, அவர்களை மது அடிமைகள் மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பி வைத்தார்.
அங்கு அவர்களுக்கு 4 நாட்கள் கவுன்சிலிங் வழங்கப்பட்டு 30 நாட்கள் போதை பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்கான பயிற்சி வழங்கப்படும். இதனை போலீசார் கண்காணித்து வருவார்கள். போதைப் பழக்கத்தில் இருந்து விடுபடவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
Comments