மியான்மரில் தவிக்கும் இந்தியர்கள்... மீட்டுக் கொண்டு வர நடவடிக்கை!

0 2272

மியான்மரில் சர்வதேச சட்டவிரோத கும்பலிடம் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை விடுவிக்க தூதரகம் மூலமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மியான்மர் நாட்டில் 50 தமிழர்கள் உட்பட 300 இந்தியர்கள் சர்வதேச சட்டவிரோத கும்பலிடம் சிக்கியிருப்பதாக தகவல் வெளியானது. வேலை வாயப்பு உறுதிமொழியுடன் அழைத்துச் செல்லப்பட்டு அவர்கள் சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அதனை மறுத்தவர்கள் சித்ரவதையும் செய்யப்பட்டுள்ளனர். இதில் 17 தமிழர்கள் தமிழக அரசுடன் தொடர்பு கொண்டு தங்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளனர்.

இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். உடனடியாக அவர்களை மீட்க வேண்டும் என்றும் பாதுகாப்பாக இந்தியா அழைத்து வர வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் மியான்மரில் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இந்தியர்களை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து இந்தியத் தூதரகம் மூலமாக 30 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வெளியுறவு இணை அமைச்சர் வி.முரளிதரன், எஞ்சியுள்ள இந்தியர்களும் விரைவில் மீட்கப்படுவார்கள் என்று உறுதி அளித்தார். மியான்மரில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியர்கள் அடைக்கப்பட்டுள்ள இடம் தாய்லாந்து எல்லையை ஒட்டிய பகுதியாக இருந்த போதும் அங்கு அந்நாட்டு அரசு அதிகாரம் செல்லுபடியாவதில்லை. சில ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் மற்றும் சர்வதேச குற்றவாளிகள் கட்டுப்பாட்டில் அப்பகுதி இருப்பதாகக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments