தமிழகத்தில் இன்ப்ளூயன்சா வைரஸ் பாதிப்பு.. 1,000 இடங்களில் காய்ச்சல் முகாம்கள்..

இன்ப்ளூயன்சா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக, நாளை தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பருவ நிலை மாற்றம் காரணமாக தமிழ்நாட்டில் பரவி வரும் இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சலால் குழந்தைகளும், முதியோர்களும் பாதிப்பிற்குள்ளாகி உள்ளனர். சென்னை, திருச்சி, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் காய்ச்சல் பாதிப்புடன் உள்நோயாளிகளாக பலர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால் சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் 7 தளங்கள் காய்ச்சல் வார்டாக மாற்றப்பட்டுள்ளன. அதேபோல், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனைகளிலும் காய்ச்சல் வார்டுகளில் கூடுதல் படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
காய்ச்சல் பரவல் எதிரொலியாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் இதுவரை இன்ப்ளுயென்சா காய்ச்சலால் ஆயிரத்து 166 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் பேட்டியளித்த அவர்,
நாளை தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடைபெறும் என்றும், சளி, இருமல், காய்ச்சல் போன்றவை இருந்தால் முகாம்களில் உடனடியாக பரிசோதனை செய்துகொள்ளலாம் என்றும் கூறினார்.
Comments