இந்தியாவில் மீண்டும் சிவிங்கி புலிகள்: விடுவித்த பிரதமர் மோடி

0 2859

நமிபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட 8 சிவிங்கி புலிகளை மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் அருகேவுள்ள குனோ தேசிய உயிரியியல் பூங்காவில் பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை நாடு முழுவதும் உள்ள பாஜகவினர் சேவைநாளாகக் கொண்டாடி வருகின்றனர்.

தமது பிறந்தநாளான இன்று, வனவிலங்குகள், பெண்கள் அதிகாரத்திற்கான சுற்றுச்சூழல், திறன் மற்றும் இளைஞர் மேம்பாடு, அடுத்த தலைமுறை உள்கட்டமைப்பு ஆகியவற்றுடன் தொடர்புடைய நான்கு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். 

இந்தியாவில் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன் அழிந்துவிட்டதாகக் கருதப்படும் சீட்டா எனப்படும் சிவிங்கிப் புலிகளை மீண்டும் அறிமுகப்படுத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டது. இதற்காக நமீபியா அரசுடன் இந்திய அரசு ஒப்பந்தம் செய்து கொண்டது.

அதன்படி நமிபியாவால் வழங்கப்பட்ட 3 ஆண், 5 பெண் சிவிங்கிப்புலிகள் போயிங்-747 சிறப்பு சரக்கு விமானம் மூலம் இன்று மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டன. பின்னர் அங்கிருந்து, சினுகுக் உள்ளிட்ட இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்களில் குனோ தேசிய உயிரியியல் பூங்காவுக்கு கொண்டு செல்லப்பட்டன.

இதைத் தொடர்ந்து, குனோ தேசிய உயிரியியல் பூங்காவில் சிவிங்கி புலிகளை விடுவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, 8 சிவிங்கி புலிகளை விடுவித்தார்.

இதையடுத்து சிவிங்கி புலிகளை பிரதமர் மோடி கேமரா மூலம் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார். 

டெல்லி விஞ்ஞான் பவனில் இன்று மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் தேசிய சரக்குப் போக்குவரத்துக் கொள்கையை பிரதமர் மோடி வெளியிடுகிறார். வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் சரக்குப் போக்குவரத்துக்கான செலவு அதிகமாக இருப்பதாகக் கருதப்படுகிறது.

இந்திய சரக்குகள் உள்ளூர் நிலையிலும், ஏற்றுமதி சந்தைகளிலும் போட்டியிட செலவைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இதன் அடிப்படையில், பல்வேறு துறைகளை ஒருங்கிணைக்கும் வகையில் தேசிய சரக்குப் போக்குவரத்துக் கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சியோப்பூரில் நடைபெற்ற  சுய உதவி குழுக்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, புதிய இந்தியாவில் பஞ்சாயத்து அலுவலகம் முதல் குடியரசுத் தலைவர் அலுவலகம் வரை பெண் சக்தியின் வலிமை பிரதிபலிப்பதாக குறிப்பிட்டார்.

கிராமங்கள் தோறும் பெண் தொழில்முனைவோருக்கான மையங்களை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை உருவாக்கும் பணியில் தமது அரசு தொடர்ந்து ஈடுபட்டிருப்பதாகவும், ஒரு மாவட்டம், ஒரு தயாரிப்பு திட்டத்தின் மூலம், உள்ளூர் தயாரிப்புகளை ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும், பெரிய சந்தைகளுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments