நிறைமாத கர்ப்பிணியை அலைக்கழித்த திருச்செந்தூர் அரசு மருத்துவமனை..!

0 2310
நிறைமாத கர்ப்பிணியை அலைக்கழித்த திருச்செந்தூர் அரசு மருத்துவமனை..!

திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணிற்கு  உரிய சிகிச்சை அளிக்காமல் ஒரு மாதம் கழித்துதான் குழந்தை பிறக்கும் என்று மருத்துவர்களால் அலைக்கழிக்கப்பட்ட நிலையில் பிரசவ வலியுடன் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தப்பெண்ணுக்கு சுகப்பிரசவத்தில் ஆண்குழந்தை பிறந்தது.

தூத்துக்குடி மாவட்டம் உமரிகாட்டைச் சேர்ந்த துர்கா என்ற கர்ப்பிணி திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் மூன்று நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். தனியார் ஸ்கேன் சென்டரில் ஸ்கேன் எடுத்து வருமாறு மருத்துவர்கள் கூறியதால் பிரசவ வலியுடன் சென்று ஸ்கேன் எடுத்து வந்த துர்காவிடம், அங்கிருந்த மருத்துவர் ஒருவர், இன்னும் ஒரு மணி நேரத்தில் இப்பெண்ணுக்கு குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதாகவும், தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறும் தெரிவித்துள்ளார்.

இதனால் பதறிபோன தாயும், மகளும், ஸ்கேன் ரிப்போர்ட்டுடன் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு வந்து தகவலை தெரிவித்துள்ளனர். அங்குள்ள மருத்துவர்களோ துர்காவுக்கு ஒரு மாதம் கழித்து தான் குழந்தை பிறக்கும் என்று அலட்சியமாக கூறி அலைக்கழித்ததாக கூறப்படுகின்றது.

தனது வயிற்றில் இருக்கும் குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்ற துடிப்போடும், வேதனையோடும், வெளியே வந்த துர்காவுக்கு, அங்கிருந்த ஆம்புலன்ஸ் வாகன ஓட்டிகள் கூட உதவிக்கு வராததால் தவித்துபோனார் அந்தப்பெண்.

வெளியில் காத்திருந்து, அவசரத்துக்கு உதவும் ஆட்டோ ஒன்றில் ஏறி தனது தாயாருடன் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் துர்க்கா

இதற்க்கிடையே நிறைமாத கர்ப்பிணிக்கு உரிய சிகிச்சையளிக்கவில்லை என அரசு மருத்துவமனைமீது அப்பெண்ணின் உறவினர்களும், பொதுமக்களும் குற்றம் சாட்டிய நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கர்ப்பிணிப் பெண் துர்காவிடம் தூத்துக்குடி மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் பொன் இசக்கி நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன் இசக்கி, துர்காவைப் பரிசோதித்த அரசு மருத்துவர்கள் அப்பெண்ணுக்கு அடுத்த மாதம்தான் பிரசவம் நிகழ வாய்ப்புள்ளதாக தம்மிடம் தெரிவித்ததாகக் குறிப்பிட்டார். இந்த விவகாரத்தில் மருத்துவர்களோ, மருத்துவமனை நிர்வாகமோ தவறு செய்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்

மருத்துவ இணை இயக்குநர் பொன் இசக்கி பேட்டி அளித்து சென்ற சில மணி நேரங்களில், தனியார் மருத்துவமனையில் துர்காவுக்கு சுகப்பிரசவத்தில் ஆண்குழந்தை பிறந்தது. தற்போது தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சில மணி நேரத்தில் குழந்தை பிறக்க இருந்த பெண்ணுக்கு ஒரு மாதம் கழித்துதான் குழந்தை பிறக்கும் என்று ஆருடம் சொன்ன மருத்துவர்கள் பணிபுரியும் இந்த திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்குத்தான், நோயாளிகளை தரமாக கையாளும் மருத்துவமனைக்கான மத்திய அரசின் தரச் சான்றிதழ் கடந்த சில தினங்களுக்கு முன்பு வழங்கப்பட்டது குறிப்பிடதக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments