பிரதமர் மோடிக்கு இன்று 72-வது பிறந்தநாள்.. புதிய சரக்குப் போக்குவரத்துக் கொள்கையை இன்று வெளியீடு.!

0 2591

நாட்டின் புதிய சரக்குப் போக்குவரத்துக் கொள்கையை பிரதமர் மோடி இன்று வெளியிடுகிறார். தமது பிறந்தநாளான இன்று, மத்தியப் பிரதேசம் மற்றும் டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார்.

பிரதமர் மோடிக்கு இன்று 72-வது பிறந்தநாள். இதனை நாடு முழுவதும் உள்ள பாஜகவினர் சேவைநாளாகக் கொண்டாடுகின்றனர்.

இதனிடையே ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி நள்ளிரவில் டெல்லி திரும்பினார். தமது பிறந்தநாளான இன்று, வனவிலங்குகள், பெண்கள் அதிகாரத்திற்கான சுற்றுச்சூழல், திறன் மற்றும் இளைஞர் மேம்பாடு, அடுத்த தலைமுறை உள்கட்டமைப்பு ஆகியவற்றுடன் தொடர்புடைய நான்கு நிகழ்வுகளில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

இந்தியாவில் 75 ஆண்டுகளுக்கு முன் அழிந்துவிட்டதாகக் கருதப்படும் சிவிங்கிப் புலிகளை மீண்டும் அறிமுகப்படுத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டது.

நமீபியா நாட்டில் இருந்து 8 சிவிங்கிப்புலிகள் போயிங்-747 சிறப்பு விமானம் மூலம் இன்று இந்தியாவுக்கு கொண்டுவரப்படுகின்றன. மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் வளர்க்கப்பட உள்ள சிவிங்கிப் புலிகளை வனத்தில் விடுவிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார்.

டெல்லி விஞ்ஞான் பவனில் இன்று மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் தேசிய சரக்குப் போக்குவரத்துக் கொள்கையை பிரதமர் மோடி வெளியிடுகிறார். வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் சரக்குப் போக்குவரத்துக்கான செலவு அதிகமாக இருப்பதாகக் கருதப்படுகிறது.

இந்திய சரக்குகள் உள்ளூர் நிலையிலும், ஏற்றுமதி சந்தைகளிலும் போட்டியிட செலவைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இதன் அடிப்படையில், பல்வேறு துறைகளை ஒருங்கிணைக்கும் வகையில் தேசிய சரக்குப் போக்குவரத்துக் கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments