அரசியல் செல்வாக்குள்ள இளைஞரின் கார் மோதி இரு பெண் பொறியாளர்கள் பலி..! 140 கிலோ மீட்டர் ஸ்பீடு விபரீதம்..!

0 5700
அரசியல் செல்வாக்குள்ள இளைஞரின் கார் மோதி இரு பெண் பொறியாளர்கள் பலி..! 140 கிலோ மீட்டர் ஸ்பீடு விபரீதம்..!

சென்னை OMR சாலையில் குடி போதையில் 140 கிலோ மீட்டர் வேகத்தில் அரசியல் பிரமுகரின் உறவினர் ஓட்டிச்சென்ற ஹோன்டா சிட்டி கார் மோதி 2 பெண் பொறியாளர்கள் தூக்கி வீசப்பட்டு பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் லட்சுமி, ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்தவர் லாவண்யா இருவரும் சோழிங்க நல்லூரில் உள்ள எச்.சி.எல் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர்.

இவர்கள் இருவரும் புதன்கிழமை இரவு 11 மணிக்கு பணி முடிந்து அருகில் உள்ள தங்கள் குடியிருப்புக்கு OMR சாலையோரம் இறங்கி நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அவர்களுக்கு பின்பக்கமாக அதி வேகத்தில் வந்த ஹோன்டா சிட்டி கார் ஒன்று அவர்கள் மீது பயங்கரமாக மோதி தூக்கி வீசி விட்டு சிறிது தூரம் தள்ளிச்சென்று நின்றது.

சம்பவ இடத்தில் இருந்த சிலர் காரை பிடித்து வைத்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் விரைந்து வந்து சாலையில் கிடந்த இரு மென்பொறியாளர்களின் உடல்களை மீட்டு பிணகூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு மது போதையில் ஹோண்டா சிட்டி காருக்குள் அமர்ந்திருந்த இளைஞரை பிடித்து விசாரித்தனர்.

பெண்கள் மீது மோதி உயிரிழப்பை ஏற்படுத்தியவர் சோழிங்க நல்லூர் தொகுதிக்குட்பட்ட முக்கிய அரசியல் பிரமுகரின் உறவினர் மோதீஸ் குமார் என்பது தெரியவந்தது.

140 கிலோ மீட்டர் வேகத்தில் காரை ஓட்டி வந்த மோத்தீஸ்குமார் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர் மீது மோதாமல் இருப்பதற்காக காரை இடதுபக்கம் திருப்பிய போது சாலையோரம் நடந்து சென்ற 2 மென்பொறியாளர்கள் மீது கார் மோதியது விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இருந்தாலும் இது விபத்தா? அல்லது திட்டமிட்ட சதி செயலா? என்பதை கண்டறிய இளைஞர் மோதீஸ்குமாரின் செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

எச்.சி.எல் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் இரவு 8 மணிக்கு மேல் பக்கத்து தெருவில் உள்ள குடியிருப்புக்கு சென்றால் கூட அலுவலக வாகனத்தில் தான் செல்ல வேண்டும் என்ற விதி இருக்கும் சூழலில் இந்த இரு பெண் மென்பொறியாளர்களும் நடந்து சென்றது ஏன்.? என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதே போல வழக்கமாக இது போன்ற விபத்து சம்பவங்களில் பலியானவர்களின் புகைப்படம் மற்றும் சிசிடிவி காட்சிகளை எளிதாக வெளியிடும் போலீசார் அரசியல் பிரமுகரின் அழுத்தம் காரணமாக விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகளை வெளியிட வில்லை.

மேலும் இரு மென்பொறியாளர்களும் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் சார்பாக போலீசாரிடம் பேசுவதற்கு உறவினர்கள் எவரும் இல்லாத நிலையில், இந்த விபத்து தொடர்பான தகவலையும் வெளியிடாமல் போலீசார் நீண்ட நேரம் ரகசியம் காத்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments