காலை முதல் மாலை வரை சோதனை.. வெறும் ரூ.7,100 மட்டுமே வீட்டில் இருந்ததாக எஸ்.பி.வேலுமணி பேட்டி..!

0 2169
காலை முதல் மாலை வரை சோதனை.. வெறும் ரூ.7,100 மட்டுமே வீட்டில் இருந்ததாக எஸ்.பி.வேலுமணி பேட்டி..!

முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர். 

அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் எல்.இ.டி. பல்புகள் வாங்கியதில் 500 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதுதொடர்பாக கோவை சுகுணாபுரத்தில் உள்ள எஸ்.பி.வேலுமணி வீடு உள்ளிட்ட 26 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சென்னை புரசைவாக்கம் சாலையில் உள்ள முருகன் எலக்ட்ரிகல் டிரேடர்ஸ், ஆழ்வார்பேட்டை கேசிபி இன்ஜினியரிங் நிறுவன அலுவலகம், திருச்சி சமிக்சா நிறுவன உரிமையாளர் சுதாகர், செங்கல்பட்டில் ஒப்பந்ததாரரான கணேஷ்குமார் ஆகியோர் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது.

மேலும், மைல்கல்லில் எஸ்.பி.வேலுமணியின் மகன் விகாஷிடம் விசாரணை நடைபெற்றது. விகாஷிடம் அவருக்கு சொந்தமான சொகுசு கார் குறித்து விசாரித்த அதிகாரிகள், காரிலும் சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது.

அதேபோல், திருவள்ளூர் மாவட்டத்தில் வேல்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது தொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் வீடு உள்ளிட்ட 13 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். புதுக்கோட்டை, மதுரை, சேலம் ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்றது.

ஊத்துக்கோட்டை வேல்ஸ் மருத்துவக் கல்லூரியின் கட்டுமான பணிகள் முடிவடையாத நிலையில், முழு வசதிகளுடன் 300 படுக்கையுடன் மருத்துவ கல்லூரி இயங்கி வருவதாக, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தரச் சான்றிதழ் வழங்கியதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஊத்துக்கோட்டையில் தனியார் மருத்துவ கல்லூரி, சேலத்தில் மூன்று அரசு மருத்துவ பேராசிரியர்கள் வீடுகள், தேனியில், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வராக பணியாற்றும் பாலாஜியின் அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இந்நிலையில், கோவை மைல்கல் பகுதியில் எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் சோதனை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. தொண்டர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். அவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்திய போலீசார், அதற்கு மறுப்பு தெரிவித்த 7 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட பலரை கைது செய்தனர்.

புதுக்கோட்டை இலுப்பூரிலும், சி.விஜயபாஸ்கருக்கு ஆதரவு தெரிவித்து அ.தி.மு.க.வினர் அப்பகுதியில் கூடினர்.

இதனிடையே, சோதனை குறித்து பேட்டியளித்த எஸ்.பி.வேலுமணி, பழிவாங்கும் முயற்சியாக நடைபெற்ற சோதனையில் தனது வீட்டில் இருந்து ஒரு ரூபாய் கூட அதிகாரிகள் கைப்பற்றவில்லை என்றும் வீட்டில் வெறும் 7 ஆயிரத்து 100 ரூபாய் மட்டுமே இருந்ததாகவும் தெரிவித்தார்.

இதனிடையே, எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனையில் 316 ஆவணங்கள், 2 வங்கி பெட்டக சாவிகள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

சோதனையில், 32 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் ரொக்கம், ஆயிரத்து 228 கிராம் தங்கம், 10 நான்கு சக்கர வாகனங்களும் கண்டறியப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், சி.விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில், 120 ஆவணங்கள், 4 வங்கி பெட்டக சாவிகள், 2 ஐபோன்கள் கைப்பற்றப்பட்டதாகவும், 18 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் ரொக்கம், ஆயிரத்து 872 கிராம் தங்க நகைகள், 8 கிலோ வெள்ளி பொருட்கள் கண்டறியப்பட்டதாகவும் லஞ்ச ஓழிப்புத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments