குவைத்தில் கொல்லப்பட்ட தந்தைக்காக பதாகை ஏந்திய பாலகர்கள்..! இவர்களுக்கு நீதி கிடைக்குமா..?
திருவாரூர் மாவட்டத்தில் இருந்து குவைத்துக்கு வேலைக்கு சென்ற 4 நாட்களிலேயே இரண்டு குழந்தைகளின் தந்தை சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தந்தையின் மரணத்துக்கு நீதி கேட்டு கையில் பதாகை ஏந்தி போராடும் பாலகர்களின் சோகம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..
கணவரை இழந்த துக்கத்தில் கதறி அழும் மனைவி..! அப்பா எப்ப வருவாங்க? என்று விழிகளை விரித்து விரக்தியில் அமர்ந்திருக்கும் இரு குழந்தைகள்..! குவைத்துக்கு வேலைக்கு சென்ற 4 வது நாளிலேயே சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படும் முத்துக்குமரன் குடும்பத்தின் பரிதாப நிலை தான் இது..!
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகாவிற்கு உட்பட்ட லட்சுமாங்குடி பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமரன். இவரது மனைவி வித்யா. இந்த தம்பதியினருக்கு நித்திஷ், ரித்தீஷ் என இரண்டு மகன்கள் உள்ளனர். முத்துக்குமரன் தனது குடும்ப சூழல் கருதி கடந்த 2ந்தேதி குவைத் நாட்டுக்கு வேலைக்கு சென்றார்.
அங்கு வேலை கடினமாக உள்ளதாக குடும்பத்தினரிடம் கூறிவந்த நிலையில் கடந்த 7ஆம் தேதி முத்துக்குமரன் கொல்லப்பட்டு விட்டதாக 9ஆம் தேதி லட்சுமாங்குடியில் இருக்கும் முத்துக்குமரனின் குடும்பத்தினருக்கு தகவல் வந்துள்ளது. இதுகுறித்து விசாரித்ததில் முத்துக்குமரன் துப்பாக்கியால் சுடப்பட்டதால் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டது.
முதன்முறையாக வெளிநாடு சென்றுள்ள முத்துக்குமரனுக்கு யாரிடமும் எந்தவித முன் விரோதமும் இல்லாத நிலையில் அவர் எதற்காக? யாரால்? சுட்டுக் கொல்லப்பட்டு உயிரிழந்தார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், முத்துக்குமரன் உடலை இந்தியாவுக்கு கொண்டு வரவும், அவரது மரணத்திற்கு காரணமானவர்களுக்கு உரிய தண்டனை பெற்று தரவும், முத்துக்குமரனை இழந்து வாடும் குடும்பத்திற்கு உரிய இழப்பீடுகளை பெற்றுத்தரவும் வலியுறுத்தி சுமார் பல்வேறு அமைப்பினர், கிராம மக்கள், முக்கிய வீதிகளின் வழியாக பேரணியாக சென்று கூத்தாநல்லூர் வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். முத்துக்குமரனின் மகன்களும் கையில் பதாகை ஏந்தி வந்தனர்
இதுகுறித்து முத்துகுமரன் மனைவி கூறுகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரிய நடவடிக்கை எடுத்து வெளிநாட்டில் உயிரிழந்த, தனது கணவரின் உடலை மீட்டு சொந்த ஊருக்கு கொண்டு வரவேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.
இதற்கிடையே முத்துக்குமரன் மரணம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவரது குடும்பத்தினரின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது
Comments