கிழக்கு லடாக் எல்லையில் இருநாட்டு படைகளும் விலக்கிக்கொள்ளப்பட்டது.!

0 2409

கிழக்கு லடாக் எல்லையில் உள்ள கோக்ரா-ஹாட்ஸ்பிரிங்ஸ் பகுதியில் இருந்து இந்தியா, சீனா படைகள் திட்டமிட்டபடி விலக்கிக்கொள்ளப்பட்டன. எல்லையில் அமைதியான சூழல் நீடித்து வருவதாக ராணுவ உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் லடாக் அருகே உள்ள கல்வான் பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு இந்திய - சீன வீரர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டதையடுத்து இரு நாட்டு படைகளும் எல்லையில் குவிக்கப்பட்டது.

கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற இரு நாட்டு உயர் அதிகாரிகளின் 16-வது சுற்று பேச்சுவார்த்தையில், கிழக்கு லடாக் எல்லையில் பதற்றத்தை தணிக்கும் வகையில் கோக்ரா-ஹாட்ஸ்பிரிங்ஸ் பகுதியில் இருந்து படைகளை திரும்பப்பெறுவது என முடிவு எட்டப்பட்டது.

ஒருங்கிணைந்த வழிமுறைகளின்படி படைகளை விலக்கும் நடைமுறைகள் கடந்த 8-ம் தேதி காலை தொடங்கியது. இரு தரப்பில் இருந்தும் உருவாக்கப்பட்ட அனைத்து கட்டமைப்புகளும் அப்பகுதியில் இருந்து பரஸ்பரம் அகற்றப்பட்டு, படை விலக்கல் நடைமுறைகள் திட்டமிட்டபடி கோக்ரா-ஹாட்ஸ்பிரிங்ஸ் பகுதியில் விலக்கிக்கொள்ளப்பட்டது.

15-வது ரோந்துப் பகுதியில் முகாமிட்டிருந்த இரு தரப்பு வீரர்களும் முழுமையாக வெளியேறி விட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. லடாக்கில் இரு நாட்டு படைகளும் விலக்கிக்கொள்ளப்பட்டாலும், டெம்சோக் மற்றும் டெப்சாங் பகுதிகளில் படைகள் விலக்கம் தொடர்பாக பிரச்சனை நீடித்து வருவதாகத் கூறப்படுகிறது.

இதனிடையே, எல்லை கட்டுப்பாடுக் கோடு பகுதியில் அமைதி நிலவி வருவதாகவும், நிலைமை முழுமையாக கட்டுக்குள் இருப்பதாகவும் கிழக்கு பிராந்திய ராணுவ கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் ஆர்.பி.கலிதா தெரிவித்துள்ளார். எல்லையில் சீனா அமைத்து வருவதாகக் கூறப்படும் உள்கட்டமைப்புப் பணிகள் குறித்து கவனத்துடன் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments