5 ஆவது பெரிய பொருளாதார நாடு இந்தியா.. பெரிய இலக்கினை இந்தியா எட்டும் - பிரதமர் மோடி

உலகளவில் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் 5ஆவது இடத்தை இந்தியா பிடித்துள்ளது சாதாரணமான சாதனை அல்ல என குறிப்பிட்ட பிரதமர் மோடி, அந்த சாதனை நாம் மேலும் கடினமாக உழைக்கவும், பெரிய இலக்குகளை அடையவும் நம்பிக்கை அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் சூரத் அருகே அரசின் நலத்திட்ட பயனாளிகள் இடையே காணொளி மூலம் பிரதமர் மோடி உரையாடினார். அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் கடந்த எட்டு ஆண்டுகளில் ஏழைகளுக்காக நாடு முழுவதும் மூன்று கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளதாகவும், அதில் குஜராத்தில் மட்டும் 10 லட்சம் வீடுகள் கட்டமைக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின்கீழ், நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் மத்திய அரசால் இதுவரை 2 லட்சம் கோடி ரூபாய் நேரடியாக செலுத்தப்பட்டு இருப்பதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
ஆரோக்கியமான இளைஞர்கள் தேசத்தின் ஆரோக்கியமான எதிர்காலமாக கருதப்படுவார்கள் என்றும், மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் மற்றும் எய்ம்ஸ் போன்றவற்றின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் மத்திய அரசு அதனை உறுதி செய்து வருவதாகவும் பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டார்.
கொரோனா பெருந்தொற்று காலத்தின் போது மிகப்பெரிய தடுப்பூசி இயக்கத்தை செயல்படுத்துவதற்கான இந்தியாவின் முயற்சிகளையும், பொருளாதார நடவடிக்கைகள் புத்துயிர் பெற அது நாட்டிற்கு உதவிய விதத்தையும் மொத்த உலகமுமே பாராட்டியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், அண்மையில் இந்தியா உலகளவில் 5ஆவது பெரிய பொருளாதார நாடாக உயர்ந்ததை சுட்டிகாட்டிப்பேசிய பிரதமர், இதனை நினைத்து ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்படுவதாகவும், இந்த உற்சாகத்தை நாம் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
Comments