மாணவன் பாலமணிகண்டனுக்கு குளிர்பானத்தில் விசம் வைத்த மாணவியின் தாய் கைது..! முதல் மதிப்பெண் போட்டியில் விபரீதம்

0 5128
மாணவன் பாலமணிகண்டனுக்கு குளிர்பானத்தில் விசம் வைத்த மாணவியின் தாய் கைது..! முதல் மதிப்பெண் போட்டியில் விபரீதம்

காரைக்கால் அருகே 8 ஆம் வகுப்பில் தனது மகளை விட நன்றாக படிக்கும் மாணவனை பழிவாங்கும் நோக்கில் விஷம் கலந்த குளிர்பானம் கொடுத்துக் கொலை செய்த மாணவியின் தாயை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் நேரு நகர் ஹவுஸ்போர்டு குடியிருப்பு பகுதியில் வசிக்கும் ராஜேந்திரன் - மாலதி தம்பதியரின் மகன் பாலமணி கண்டன். அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்தான். சம்பவத்தன்று ஆண்டுவிழா முடிந்து பள்ளியில் இருந்து வீடு திரும்பிய மாணவன் வாந்தி எடுத்து அவதிப்பட்டுள்ளான்.

மாணவனை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்குள்ள மருத்துவர்களிடம் தான் பள்ளி காவலாளி கொடுத்த குளிர்பானத்தை குடித்ததாகவும், மற்றொரு குளிர்பானத்தை பள்ளிப்பையில் வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளான். இதையடுத்து மாணவன் பையில் இருந்த குளிர்பானத்தை கைப்பற்றிய பெற்றோர் இது தொடர்பாக காரைக்கால் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் பள்ளிக்கு சென்று காவலாளி தேவதாசிடம் விசாரித்தனர். அவரோ, அருள் மேரி என்ற மாணவியின் தாய் விக்டோரியா என்பவர், மாணவனின் தாய் கொடுத்தனுப்பியதாக தன்னிடம் குளிர்பானங்களை கொடுத்துச்சென்றதாக தெரிவித்தார். விக்டோரியாவிடம் விசாரித்த போது தான் அப்படியெல்லாம் கொடுக்கவில்லை என்று மறுத்தார். பள்ளியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது சம்பவத்தன்று விக்டோரியா வெள்ளை நிற பிளாஸ்டிக் பையில் இரு குளிர்பான பாட்டில்களை காவலாளியிடம் கொடுத்துச்சென்றது தெரியவந்தது.

இதையடுத்து விக்டோரியாவை பிடித்து விசாரித்த போது திடுக்கிடும் தகவல் வெளியானது. மாணவன் பாலமணிகண்டனும் தனது மகள் அருள் மேரியும் ஒரே வகுப்பில் படித்து வருவதாகவும், வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்து பால மணிகண்டன் முதல் மாணவனாக வந்து விடுவதால் தன்னால் முதல் மாணவியாக வர முடியவில்லை என்று தனது மகள் அருள் மேரி தன்னிடம் சண்டையிட்டதாகவும், அவன் உயிரோடு இருக்கும் வரை தனது மகள் முதல் மதிப்பெண் எடுக்க இயலாது என்பதால் விஷம் கலந்த குளிர்பானத்தை மாணவனுக்கு குடிக்க கொடுத்ததாக விக்டோரியா கூறியதாக தெரிவித்த போலீசார். மாணவியின் தாய் விக்டோரியாவை கைது செய்தனர்.

மருத்துவ மனையில் தீவிர சிகிச்சையின்போது பேசிய சிறுவன் பாலமணிகண்டன், தான் பள்ளியில் அதிக மதிப்பெண் எடுக்கும் போதெல்லாம் , மாணவி அருள் மேரி தன்னை திட்டுவார் என்று தெரிவித்தான். இந்நிலையில், சிகிக்சை பலனின்றி அச்சிறுவன் நள்ளிரவில் உயிரிழந்தான்..

 நல்ல மதிப்பெண் பெற்று முதல் மாணவியாக வேண்டும் என்று நினைப்பது தவறல்ல, அதே நேரத்தில் தன்னைவிட நன்றாக படிக்கின்ற மாணவனை கொலை செய்ய வேண்டும் என்று மாணாவியின் தாய் விபரீத முடிவெடுத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் மாணவன் பாலமணிகண்டன் உயிரிழந்ததை அறிந்து காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு திரண்ட உறவினர்கள் மருத்துவமனையில் கண்ணாடி, குடிநீர் இயந்திரம் ஆகியவற்றை அடித்து நொறுக்கினர். தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவு முன்பு அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments