தங்க தாலி அறுக்கும் அபேஸ் ஆத்தாக்கள்.. ஆதாரால் துப்பு துலங்கியது..! சங்கிலி அறுக்கும் பரபரப்பான காட்சி..!
சென்னை அடுத்த தாம்பரத்தில் அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிடவந்த 8 பெண்களிடம் கூட்டத்தை பயன்படுத்தி தங்க சங்கிலிகளை பறித்துச்சென்ற ஜேப்படி பெண்ணை போலிசார் கைது செய்துள்ளனர். ஆதார் அட்டையின் உதவியால் கொள்ளைக்காரியை தட்டித்தூக்கிய தனிப்படையின் துப்புத்துலக்கும் திறன் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு
சென்னை அடுத்த கேளம்பாக்கம் கோட்டையூர் அம்மன் கோவில் திருவிழாவில் சாமி கும்பிடச்சென்ற 8 பெண்களிடம் மர்ம கும்பல் ஒன்று கூட்டத்தை பயன்படுத்தி தங்கசங்கிலிகளை அறுத்து பறித்துச்சென்றது. தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் தாளம்பூர் காவல் ஆய்வாளர் வேலு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
கோவிலில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், கூட்டத்தை பயன் படுத்தி முன்னால் நிற்கும் பெண்களின் கழுத்தில் சேலையை போட்டு மறைத்து தங்க சங்கிலியை அறுத்து எடுத்துக் கொண்டு எஸ்கேப் ஆகும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
கூட்டத்தில் பிரசாதம் வாங்க முண்டியடிக்கும் கூட்டத்தை தங்களுக்கு சாதகமாக்கி இரு பெண்கள், ஒரு ஆணுடன் சேர்ந்து ஒரே நாளில் 8 பேரின் கழுத்தில் கைவரிசை காட்டியது தெரியவந்தது. இதையடுத்து சிசிடிவியில் சிக்கிய 3 பேரின் படங்களையும் வரைந்த போலீசார் , அவர்களை போல உருவ ஒற்றுமை உள்ள 50 பேரின் பெயர் விவரங்களை சேகரித்தனர். இதில் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் குறித்து விசாரித்த போது சிலரது விவரங்கள் கிடைத்தது.
இவர்களில் எத்தனை பேரின் செல்போன் எண்கள் சம்பவத்தன்று கோட்டையூர் பகுதியில் இருந்தது என்பதை ஆய்வு செய்தனர். அதில் மணி மங்கலத்தை சேர்ந்த பாண்டீஸ்வரி, ரதி, அஜீத் ஆகியோரது எண்கள் சம்பவத்தன்று கோட்டையூர் கோவிலில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர்கள் ஏற்கனவே இது போல கோவில் ஒன்று விழாவில் திருடி சிக்கிக் கொண்டவர்கள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து இந்த 3 பேரும் எர்ணாகுளத்தில் ஒரு கோவில் விழாவை குறி வைத்து சென்றிருப்பதை செல்போன் சிக்னல் மூலம் கண்டறிந்த தனிப்படை அங்கு விரைந்தனர்.
அந்த கோவிலில் கொள்ளை திட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன்பாக தனிப்படை போலீசார் சுற்றி வளைத்தனர். இதில் பாண்டீஸ்வரி சிக்கிக் கொள்ள அஜீத் மற்றும் ரதி ஆகியோர் தப்பி ஓடிவிட்டனர். பண்டீஸ்வரியிடம் இருந்து 47 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
பாண்டீஸ்வரி குழுவில் 40 க்கும் மேற்பட்டோர் இருப்பதாகவும் அனைவரும் உறவினர்கள் என்றும் கோவில் திருவிழாக்களை தங்களுக்குள் பிரித்துக் கொண்டு குடும்பம் குடும்பமாய் கிளம்பிச்சென்று தங்க சங்கிலி பறிப்பு சம்பவத்தில் ஈடுபடுவதாக சுட்டிக் காட்டும் போலீசார் , கோவில் ஒன்றில் கொள்ளைக்காரி ரதி ஒரு பெண்ணின் கழுத்தில் இருந்து நகையை திருடும் காட்சியை வெளியிட்டுள்ளனர்.
கொள்ளை கும்பலை தேடிவரும் அதே நேரத்தில் கோவிலுக்கு அதிகமாக நகைகள் அணிந்து செல்லும் பெண்கள் கவனமுடன் இருக்க வேண்டுகோள் போலீசார் விடுத்துள்ளனர்.
Comments