'அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது என்ற உத்தரவு ரத்து' - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

0 7500

ஜுலை 11ஆம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவிற்கு தடை கோரி ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன், அ.தி.மு.க.வில் ஜூன் 23 ஆம் தேதிக்கு முன் இருந்த நிலை நீடிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.

தனி நீதிபதியின் இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில் நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் தீர்ப்பளித்தனர். 

மேலும், பொதுக்குழு ஜூலை 11ல் நடக்கும் என ஜூன் 23ஆம் தேதியன்று நடந்த பொதுக்குழுவில் அறிவித்ததை முறையான நோட்டீஸாகத்தான் கருத வேண்டும் என்றும் பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று நடத்தப்படும் சிறப்பு கூட்டங்களுக்கு இன்னொரு நோட்டீஸ் அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இருவருக்கும் இடையிலான மோதல் காரணமாக இணைந்து சிறப்பு பொதுக்குழுவை கூட்டுவார்கள் எனவும் எதிர்பார்க்கமுடியாது என்றும் ஒருவருக்கொருவர் இடையே ஒத்துழைப்பு இல்லாத நிலையில், பொதுக்குழுவே கூட்டமுடியாத நிலைதான் உள்ளதாக நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டனர்.

இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். இடையே பிரச்சினை நிலவுவதால், ஜூலை 11 பொதுக்குழு சட்டவிரோதம் என கூற முடியாது என்றும் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் உள்ள பொதுக்குழுவுக்குதான் உச்சபட்ச அதிகாரம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இருவரும் இணைந்து கூட்ட இயலாத நிலையில் ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை நாடும் நிலைக்கு தள்ள முடியாது நீதிபதிகள் தெரிவித்தனர்.

பொதுக்குழுவுக்கு தலைமை நிலைய செயலாளர் அறிவிப்பு வெளியிட்டதில் தவறில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஜூலை 11ல் பொதுக்குழு கூட்ட வேண்டுமென்ற கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படாத நிலையில், அதனை போலியானது என்று சொல்ல முடியாது என்றும், பொதுக்குழு, செயற்குழுவை இருவரும் இணைந்துதான் கூட்ட வேண்டும் என்ற உத்தரவால் கட்சி முடங்கும் நிலை ஏற்பட்டதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

மேலும், ஜூன் 23 பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து வழக்கு தொடராத நிலையில், அதற்கு முந்தைய நிலை நீடிக்க வேண்டுமென்ற உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும் இருவரும் இணைந்து தான் கூட்டங்களை கூட்ட வேண்டுமென்ற உத்தரவு நடைமுறைக்கு சாத்தியமில்லாதது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஒருங்கிணைப்பாளர் பதவி காலியானதாக இணை ஒருங்கிணைப்பாளர் கடிதம் எழுதி உள்ள நிலையில், அதே பதவியில் தொடர உத்தரவிட்டது தவறு என்றும் தனி நீதிபதி தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது என்றும் நீதிபதிகள் தங்களின் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், உயர்நீதிமன்ற தீர்ப்பை அடுத்து, சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள இ.பி.எஸ். இல்லத்தில் அ.தி.மு.க. தொண்டர்கள் இனிப்புகளை வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் உற்சாகமாக கொண்டாடினர்.

மேலும், எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அ.தி.மு.க.வினர் உற்சாக முழக்கத்துடன் வாழ்த்து தெரிவித்தனர். பூங்கொத்துக்களை கொடுத்தும், சால்வைகளை அணிவித்தும் வாழ்த்து சொல்ல ஏராளமானோர் திரண்டனர்.

இதனிடையே, இருவர் அமர்வு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments