விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்.. கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை.!

0 2175

தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வரும் நிலையில், பல இடங்களில் வேல் விநாயகர், கலச விநாயகர், பூந்தி விநாயகர் என வித்தியாசமாக செய்யப்பட்டிருக்கும் விநாயகர் சிலைகள் பக்தர்களை கவர்ந்துள்ளன.

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் கோவில் விழாக்கோலம் பூண்டது. கோவிலுக்கு எதிரே உள்ள பொற்றாமரை குளத்தில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

 விநாயகர் சதுர்த்தி சிறப்பு படையலாக, திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையாருக்கு தலா 75 கிலோ எடை கொண்ட 2 மெகா கொழுக்கட்டைகள் படையிலப்பட்டன. மலை அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகருக்கு ஒரு கொழுக்கட்டை படைக்கப்பட, மலை உச்சியில் உள்ள பிள்ளையாருக்கு ஒரு கொழுகட்டை தூளி கட்டி தூக்கிச் சென்று விநாயகருக்கு படையலிடப்பட்டது. .

 கோவை மாவட்டம் புலியகுளத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய முந்தி விநாயகர் ஆலயத்தில், விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சுமார் 4 டன் மலர்களால் 19 அடி உயர விநாயகர் சிலைக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

உலகப்புகழ் பெற்ற புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் உள்ள மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவசம் சாத்தப்பட்டது. கோவிலில் நூற்றுக் கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

 திண்டுக்கல்லில் ஒரே கல்லால் செய்யப்பட்ட சுமார் 32 அடி உயர ஸ்ரீ மஹா சங்கடஹர சதுர்த்தி விநாயகர், 2 ஆயிரம் தென்னங்கன்றுகளுக்கு மத்தியில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆலயத்தில் உள்ள 108 விநாயகர் சிலைகளும் பல்வறு விதமான செடிகளால் அலங்கரிக்கப்பட்டன.

காஞ்சிபுரத்தில் ஏலேல சிங்க விநாயகர் கோவிலில் விநாயகர் சன்னதி மற்றும் கருவறை முழுவதும் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான 100, 200, 500, 2000 ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டது. விநாயகருக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

 சென்னை கொளத்தூர் ரெட் ஹில்ஸ் சாலையில சுமார் 50 ஆயிரம் பஞ்சலோகத்தால் ஆன சிறிய வடிவ வேல்களைக் கொண்டு சுமார் 30 அடி உயர விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதே போல கொளத்தூர் பூம்புகார் நகரில் 3 ஆயிரத்து 600 கலசத்தினால் செய்யப்பட்ட விநாயகர் சிலை பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.

 சென்னை தியாகராயர் நகரில் சுமார் 100 கிலோ பூந்தி, 25 கிலோ பால்கோவா உள்ளிட்ட உணவு பண்டங்களைக் கொண்டு விநாயகர் சிலை செய்யப்பட்டு மக்களின் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டுள்ளது. கடலில் சிலையை கரைக்கும் போது உயிரினங்கள் சாப்பிடுவதற்காக இந்த புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னை மணலியில் 35 ஆயிரம் ஸ்கெட்ச் பேனா மற்றும் 800 ஜியோமெட்ரிக் பாக்ஸ்கள் மூலம் செய்யப்பட்ட 18 அடி உயரம் கொண்ட, புத்தகம் படிக்கும் விநாயகர் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இந்த சிலை 4 நாட்கள் வைக்கப்பட்டு பின்னர் அப்பகுதியில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு இந்த கலர் பென்சில்கள், ஜியோமெட்ரிக் பாக்ஸ்கள் வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ராயபுரத்தில், விநாயகரும் அவரது வாகனமான மூஷிகரும் இருசக்கர வாகனத்தில் செல்வது போன்று வைக்கப்பட்டுள்ள சிலை பக்தர்களை  கவர்ந்துள்ளது. மூஷிகர் வகிடு எடுத்து தலை வாரி சீருடை அணிந்து, தோல் பையை மாட்டிக் கொண்டு விநாயகருடன் இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு செல்வது போன்று இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

சென்னை திரு.வி.க. நகர் திருவள்ளுவர் தெருவில், மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக, இந்துக்களும் இஸ்லாமியர்களும் இணைந்து, ஆயிரத்து 855 அன்னாசி பழங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட 13 அடி உயர விநாயகர் சிலையை வைத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments