பக்ரைனில் வேலை கையில் எலும்பு முறிவு.. தவித்த இளைஞர் மீட்பு..! வெளிநாட்டு வேலைக்கு செல்வோர் கவனிக்க

0 3247

பக்ரைன் நாட்டிற்கு வேலைக்கு சென்ற 3ஆவது நாளே கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து கைமுறிந்து சாப்பிட வழியில்லாமல் தவித்த இளைஞரை மீட்டு இந்திய தூதரகத்தின் உதவியுடன் அவரை தமிழகம் அனுப்பி வைத்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்ராம்பள்ளியைச் சேர்ந்த முருகன் என்பவர் இடைத்தரகர் மூலமாக 75 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்தி, கட்டிட தொழிலாளி வேலைக்கு பஹ்ரைன் நாட்டிற்கு சென்றுள்ளார்.

சம்பந்தப்பட இடைத்தரகர், முருகனை அவரது பஹ்ரைன் முதலாளியிடம் ஒப்படைத்து விட்டார். இவரது நிறுவனம் இவருக்கான உணவுத் தேவைகளை சரிவர பூர்த்தி செய்யாமல் இருந்ததால், வந்த மூன்றாவது நாளே , பசி மயக்கத்தில் வேலை செய்த கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்த முருகனுக்கு கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

சரியான சிகிச்சையும் நிறுவனம் சார்பில் அளிக்கப்படவில்லை. இதனால் தன்னை மீண்டும் ஊருக்கே திருப்பிஅனுப்பி விடுங்கள் என்று கதறி உள்ளார். அதனை அந்த நிறுவனம் ஏற்காத நிலையில், முருகன் இந்தியத் தூதரகத்தைத் தொடர்பு கொண்டு உதவி கேட்டுள்ளார்.

பஹ்ரைனில் தமிழ் உறவுகளுக்கும் எப்போதும் உதவிக்கரம் நீட்டிக்கொண்டிருக்கும் அன்னை தமிழ் மன்றத்தின் நிர்வாகிகளைத் தொடர்பு கொள்ளுமாறு தூதரக அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்

அவரது அழைப்பை ஏற்று அவரை மீட்டு வந்து, அவருக்கான உணவுத் தேவை மற்றும் இருப்பிடம் அனைத்தும் அன்னை தமிழ் மன்றத்தின் நிர்வாகிகளால் செய்து கொடுக்கப்பட்டது.

இவரது கடவுச்சீட்டை இவரது முதலாளி திரும்பக் கொடுக்காததால், இவருக்கு இந்தியத் தூதரகம் மற்றும் பஹ்ரைன் அரசாங்கத்தின் ஒத்துழைப்போடு புதிய கடவுச்சீட்டு மற்றும் தடையில்லா சான்றிதழ் ஏற்பாடு செய்து வழங்கபட்டது.

அதன் தொடர்ச்சியாக இன்று தமிழகத்திற்கு முருகனை அனுப்பி வைக்க விமான நிலையம் அழைத்து வந்தனர்.

இவரது பிரச்னையில் பெரிதும் உதவியாக இருந்த இந்தியத் தூதர் ஃபியூஸ் ஸ்ரீவத்ஸவா மற்றும் தூதரக அதிகாரிகளுக்கு அன்னை தமிழ் மன்றத்தின் செந்தில்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் நன்றி தெரிவித்துக் கொண்டு , இளைஞர் முருகனை பத்திரமாக விமானத்தில் சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments