ஜெயிலர் வீட்டுக்கு தீவைத்த பிரபல ரவுடியின் கூலிப்படை கும்பல்..! செல்போன் பறிமுதலால் ஆத்திரம்..!

0 3935
ஜெயிலர் வீட்டுக்கு தீவைத்த பிரபல ரவுடியின் கூலிப்படை கும்பல்..! செல்போன் பறிமுதலால் ஆத்திரம்..!

கடலூர் மத்திய சிறையில் உதவி ஜெயிலராக உள்ள மணிகண்டனின் வீட்டிற்குள் பெட்ரோல் ஊற்றி மர்ம கும்பல் தீவைத்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரவுடியிடம் சிறைக்குள் செல்போனை பறிமுதல் செய்ததால் பழிக்குபழியாக நடந்த சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

கடலூர் மத்திய சிறையில் மத்திய சிறையில் உதவி ஜெயிலராக பணிபுரிந்து வருபவர் மணிகண்டன். இவர் தனது மனைவி குழந்தைகளுடன் காவலர் குடியிருப்பில் வசித்து வருகின்றார்.

சம்பவத்தன்று மணிகண்டன் வெளியூர் சென்றிருந்த நிலையில், வீட்டின் படுக்கை அறையில் அவரது குடும்பத்தினர் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

அதிகாலை அறைக்குள் புகை வருவதை உணர்ந்த அவர்கள் எழுந்து சென்று பார்த்த போது வீட்டின் சமையல் அறையில் தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.

வரவேற்பறைக்கு பரவிக் கொண்டிருந்த தீயை விரைவாக செயல்பட்டு மணி கண்டந் குடும்பத்தினர் அணைத்தனர்.

இந்த தீயில் கிரைண்டர் உள்ளிட்ட பொருட்கள் கருகி சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக சிலிண்டர் வெடிப்பதற்குள்ளாக தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது.

சமையல் அறை ஜன்னல் வழியாக யாரோ வீடிற்குள் பெட்ரோல் ஊற்றி தீவைத்திருப்பது தெரியவந்ததை தொடர்ந்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விரைந்து வந்த போலீசார், அங்கிருந்த தடயங்களை ஆராய்ந்து சுவற்றில் உள்ள கைரேகைகளை சேகரித்தனர்.

கடந்த 8-ந்தேதி சிறையில் கைதிகளிடம் அதிரடி சோதனை நடத்திய உதவி ஜெயிலர் மணிகண்டன், பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரனிடம் இருந்து ஆன்ராய்டு செல்போன் மற்றும் சில பேட்டரிகளை கைப்பற்றி உள்ளார். அப்போது செல்போனை கொடுக்க மறுத்து தனசேகரன், மணிகண்டனிடம் தகராறு செய்துள்ளார்.

அதையும் மீறி தனசேகரனிடம் இருந்த செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் மற்ற கைதிகள் முன்னர், தன்னிடம் செல்போனை பறிமுதல் செய்து தனது இமேஜை காலி செய்த உதவி ஜெயிலர் மணிகண்டனை எச்சரித்ததாக கூறப்படுகின்றது.

உதவி ஜெயிலர் மணிகண்டன் தாக்கியதாக, ரவுடி தனசேகரன் தரப்பில் அவரது வழக்கறிஞர்கள் கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக கூலிபடையை ஏவி, உதவி ஜெயிலர் மணிகண்டன் வீட்டில் பெட்ரோல் ஊற்றி தீவைக்கப்படுள்ளது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சினிமா பாணியில் போலீசார் குடும்பத்தை பழிவாங்கும் இந்த விபரீத சம்பவத்தில் ஈடுபட்ட கூலிப்படை நபர்கள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments