மேல்முறையீட்டு வழக்கில் அனல்பறந்த வாதங்கள்.. தீர்ப்பு ஒத்திவைப்பு.!

0 4679

அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனிநீதிபதியின் உத்தரவை எதிர்த்து, எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது. இறுதிகட்ட விசாரணையில் அனல்பறக்கும் வாதங்கள் அரங்கேறின.

உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்ற இறுதி விசாரணையில், காலையில் இபிஎஸ் தரப்பு வாதங்கள் முன் வைக்கப்பட்டன. 

ஓபிஎஸ் உள்ளிட்ட மனுதாரர்கள் தரப்பில்  கோரப்படாத நிவாரணத்தை தனிநீதிபதி வழங்கியது அசாதாரணமானது என்றும் இபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது. ஓபிஎஸ் உடன் இணைந்து செயல்பட முடியாது என்றும், சுயநலனுக்காகவே ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், இபிஎஸ் வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

கட்சியில் ஒற்றை தலைமையை கொண்டு வர 2,539 பொதுக்குழு உறுப்பினர்கள் ஒப்புக் கொண்டு கையெழுத்திட்டுள்ளதாகவும் இபிஎஸ் வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

 உள்ளாட்சி இடைத்தேர்தலில் வேட்பாளர்கள் படிவத்தில் கையெழுத்திட ஓபிஎஸ் மறுத்ததால் சின்னம் கிடைக்காமல் அதிமுக வேட்பாளர்கள் தோல்வி அடைந்ததாகவும் இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

பிற்பகலில் தொடர்ந்த விசாரணையில், தலைமைக்கழகத்தின் பெயரில் தான் பொதுக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதே தவிர, ஒருங்கிணைப்பாளர்கள் பெயரில் அல்ல என்று ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இறுதிகட்ட விசாரணை மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். மேலும் இருதரப்பு வாதங்களையும், எழுத்துபூர்வமாக நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்குள் தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments