ரூ.5 கோடி கடனுக்காக கடத்தப்பட்ட தொழிலதிபர்.. 2 மணி நேரத்தில் மீட்ட போலீஸ்..!

0 2587
ரூ.5 கோடி கடனுக்காக கடத்தப்பட்ட தொழிலதிபர்.. 2 மணி நேரத்தில் மீட்ட போலீஸ்..!

சென்னையில், மணல் குத்தகை எடுத்து தருவதாக கூறி  5 கோடி ரூபாய் பெற்று திருப்பிச் செலுத்தாத ரியல் எஸ்டேட் அதிபரை கடத்திய கும்பலை, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தகவலை வைத்து இரண்டு மணி நேரத்தில் கைது செய்த போலீசார், தொழிலதிபரை பத்திரமாக மீட்டனர். 

நிதி மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வரும் சரவணன், மயிலாடுதுறையை சேர்ந்த ஆரோக்கியராஜ் என்பவரிடம், 5 கோடி ரூபாய் வாங்கியதாக கூறப்படுகிறது.

பலமுறை வாங்கிய தொகையை திருப்பி கேட்டும் சரவணன் அதனை திருப்பித்தராத நிலையில், நேற்று வாங்கிய தொகையை திருப்பி செலுத்த இறுதி கெடு விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

நேற்று மாலை, சுமார் 12 பேருடன் தியாகராய நகர் வந்த ஆரோக்கியராஜ், வீடு புகுந்து சரவணனை கடத்திச்சென்றதுடன், வீட்டில் இருந்த தங்க நகைகள், 45 லட்ச ரூபாய் மதிப்பிலான மூன்று வாட்ச்சுக்கள், வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 சொகுசு கார்களையும் கடத்தியுள்ளனர்.

இதுகுறித்து சரவணனின் சகோதரர் முத்துக்குமரன், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு கடத்தல்காரர்களின் வாகன எண் உள்ளிட்டவற்றை அளித்து தகவல் தெரிவித்துள்ளார்.

கடத்தல் குறித்து சென்னை மற்றும் புறகாவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சரவணகுமாரின் பிஎம்டபிள்யூ கார் செம்மஞ்சேரி அருகே இருப்பது தெரியவந்தது.

தொடர்ந்து செம்மஞ்சேரி மற்றும் கண்ணகி நகரில் நிறுத்தப்பட்டிருந்த பென்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூ கார்களை மடக்கிப் பிடித்த போலீசார் கடத்தல்காரர்களை கைது செய்தனர்.

அதேநேரம் கிழக்கு கடற்கரை சாலையில், ஆரோக்கியராஜ் பார்ச்சுனர் காரில் சரவணனை கடத்தி செல்வது தெரிய வந்த நிலையில், போலீசார் அவர்களை மடக்கிப்பிடித்து சரவணனை மீட்டு, கடத்தலில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்தனர்.

விசாரணையில், தேனியில் மணல் குத்தகை எடுத்து தருவதாக கூறி ஆரோக்கியராஜிடம் இருந்து சரவணக்குமார் 5 கோடி வரை பெற்றதும், மணல் குத்தகை எடுத்து தராமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. பலமுறை பணத்தை திருப்பி கேட்டு தராததால் ஆரோக்கியராஜ் கடத்தலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இந்த கடத்தல் புகார் தொடர்பாக ஆரோக்கியராஜ், அரவிந்த், அஃப்ரோஸ் அஜய், விஜயபாண்டி, நாகேந்திரன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், நாகேந்திரன் கோயமுத்தூர் சிறைத் துறையில் காவலராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments