ஒண்டியாக சென்று சாதித்த ஒண்டிவீரன்.. முதல் சுதந்திர முழக்கமிட்ட மாவீரன்.!

0 4440
ஒண்டியாக சென்று சாதித்த ஒண்டிவீரன்.. முதல் சுதந்திர முழக்கமிட்ட மாவீரன்.!

தென் தமிழகத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக முதல் சுதந்திர போராட்ட வீர முழக்கமிட்ட ஒண்டி வீரனின் பெருமைகளை போற்றும் வகையில் மத்திய அரசு நாளை நினைவுத்தபால் தலை வெளியிடுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு....

தற்போதைய தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் தாலுக்காவில் உள்ள நெற்கட்டான் செவ்வயல் கிராமத்தை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்த செல்லையா - பகடை கருப்பாயி தம்பதியினரின் எட்டு குழந்தைகளில் கடைசிக் குழந்தையாக பிறந்தவர் தான் ஒண்டி வீரன்.

இவரது இயற்பெயர் முத்து வீரன். ஆனால், எதிரிகளை தன்னந்தனியாக எதிர்கொண்டு வீழ்த்தும் வல்லமை பெற்று விளங்கியதால் அவருக்கு ஒண்டி வீரன் என்ற பெயர் ஏற்பட்டது.

கிபி 18 ஆம் நூற்றாண்டின் ஒப்பற்ற மன்னனாக திகழ்ந்த பூலித்தேவனின் நம்பிக்கைக்குரிய படைத் தளபதியாக திகழ்ந்த ஒண்டி வீரன், பூலித்தேவனின் போர்வாள் என்று போற்றப்பட்டார். 1755 ஆம் ஆண்டு ஆற்காடு நவாப்பிடம் இருந்து நெல்லை சீமையில் வரி வசூல் செய்யும் உரிமையை ஆங்கிலேயர்கள் பெற்றனர்.

இதனை எதிர்த்து வீர முழக்கமிட்ட ஒண்டி வீரன், ஆற்காடு நவாப்பின் படையையும், தளபதி அலெக்சாண்டர் ஹெரான் தலைமையிலான கிழக்கிந்திய கம்பெனியின் படையையும், நெற்கட்டான் செவ்வயல் கிராமத்தில் வைத்து போரிட்டு விரட்டியடித்தார்.

1757முதல் 1759 ஆம் ஆண்டுவரை ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் ஆதரவாளர்களை எதிர்த்து கங்கைகொண்டான், ஆழ்வார்குறிச்சி, நெற்கட்டான் செவ்வயல், ஊத்துமலை, சுரண்டை, வாசுதேவநல்லூர் உள்ளிட்ட இடங்களில் நடைப்பெற்ற போர்களிலும் ஒண்டி வீரன் தலைமையிலான படை எதிரிகளை தோற்கடித்து வெற்றி வாகை சூடியது.

நாட்டின் 75 விடுதலை பெருவிழாவை முன்னிட்டு, அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களை அடையாளம் கண்டு பெருமைப்படுத்தி வரும் மத்திய அரசு, ஒண்டி வீரனின் புகழை போற்றும் வகையில், ஒண்டிவீரனின் மணி மண்டபம் அமைந்துள்ள, பாளையங்கோட்டையில் நாளை நினைவு தபால் தலை வெளியிடுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments