10 கோடி குடும்பங்களுக்கு குழாய் மூலம் குடிநீர் வசதி வழங்கப்பட்டுள்ளது - பிரதமர் மோடி

நாட்டில் இன்று 10 கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு குழாய்கள் மூலம் சுத்தமான குடிநீர் இணைப்பு வசதி வழங்கப்பட்டுள்ளதாகவும், இது ஒவ்வொரு வீட்டிற்கும் தண்ணீர் விநியோகம் என்ற மத்திய அரசின் பிரச்சாரத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்றும் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.
கோவாவில் நடைபெற்ற மத்திய அரசின் ஹர் கர் ஜல் உத்சவ் என்ற ஒவ்வொரு வீட்டிற்கும் தண்ணீர் விநியோகம் இயக்கத்தின் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி காணொளி மூலம் பங்கேற்றுப் பேசினார்.
கோவாவில் அனைத்து வீடுகளுக்கும் குழாய் நீர் வசதி ஏற்படுத்தி இருப்பதன் மூலம் இன்று ஒரு மைல்கல்லை அம்மாநிலம் எட்டியுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். இந்த சாதனைக்காக ஒவ்வொருவரையும், குறிப்பாக பெண்கள் மற்றும் சகோதரிகளை வாழ்த்த விரும்புவதாக மோடி கூறினார்.
தாத்ரா நகர் ஹவேலி, டையு மற்றும் டாமன் ஆகிய யூனியன் பிரதேசங்களும் இதே சாதனையை எட்டியிருப்பதாக பிரதமர் பெருமிதத்துடன் தெரிவித்தார். 'ஜல் ஜீவன் மிஷன்' திட்டத்தின் கீழ், வெறும் 3 ஆண்டுகளில், 7 கோடி கிராமப்புற வீடுகளுக்கு குழாய் நீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.
இது சாதாரண சாதனையல்ல என்றும் சுதந்திரம் பெற்ற பின் 7 தசாப்தங்களில், நாட்டிலுள்ள 3 கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு மட்டுமே குழாய் நீர் வசதி இருந்தது என்று மோடி சுட்டிக்காட்டினார். ஒரு அரசாங்கத்தை அமைக்க அவ்வளவு முயற்சி தேவையில்லை, ஆனால் ஒரு நாட்டை கட்டமைப்பதற்கு, கடின உழைப்பு அவசியம் என்று பிரதமர் தெரிவித்தார்.
அதனால் தேசத்தை கட்டமைக்கும் பாதையை பாஜக அரசு தேர்ந்தெடுத்ததாக மோடி குறிப்பிட்டார். நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் ஆகிய இரண்டின் சவால்களையும் எதிர்கொள்வதற்கும் தீர்ப்பதற்கும் தொடர்ந்து பணியாற்றி வருவதாக பிரதமர் தெரிவித்தார்.
நாட்டைப் பற்றி கவலைப்படாத மக்கள் நாட்டின் நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை என்று எதிர்க்கட்சிகளை பிரதமர் சாடினார்.
Comments