15 நிமிடங்களில் 32 கிலோ நகைகளை திருடியது எப்படி? முக்கிய கொள்ளையன் பரபரப்பு தகவல்..!

0 11002
15 நிமிடங்களில் 32 கிலோ நகைகளை திருடியது எப்படி? முக்கிய கொள்ளையன் பரபரப்பு தகவல்..!

சென்னை ஃபெட் கோல்டு லோன்ஸ் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் இன்று முழுவதும் மீட்கப்பட்ட நிலையில், கொள்ளைச் சம்பத்தை நிகழ்த்தியது தொடர்பாக முக்கிய கொள்ளையனான முருகன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளான்.

சென்னை அரும்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் ஃபெட் கோல்டு லோன்ஸ் வங்கியில் இரு தினங்களுக்கு முன்பு கொள்ளை சம்பவம் நடந்தது. வங்கியில் பணிபுரிந்த முருகன் என்ற ஊழியரே நண்பர்களுடன் சேர்ந்து நகைகளை கொள்ளையடித்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த வழக்கில் முக்கிய கொள்ளையன் முருகன், அவரது கூட்டாளிகள் சூர்யா, சந்தோஷ், பாலாஜி, சக்திவேல் ஆகியோர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் நேற்று முதற்கட்டமாக 18 கிலோ தங்கம் மீட்கப்பட்ட நிலையில் இன்று காலை சென்னை வில்லிவாக்கத்தில் முருகனின் கூட்டாளியான சூர்யா கைது செய்யப்பட்டார்.

முக்கிய கொள்ளையனான முருகனின் கூட்டாளி சூர்யா மற்றும் கொள்ளைக்கு மறைமுகமாக வாகனங்களை கொடுத்தும் நகைகளை உருக்குவதற்கும் உடந்தையாக இருந்த நபர்களையும் அழைத்து வந்து அரும்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது.

14 கிலோ தங்கத்தை சூர்யாவிடம் கொடுத்து அனுப்பியதாக முருகன் கூறியதன் படி நடந்த விசாரணையில், விழுப்புரத்தில் உள்ள தனது நண்பர் வீட்டில் சூர்யா தங்கத்தை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

பின்னர். விழுப்புரம் விரைந்து அங்கே இருந்த தங்கத்தை மீட்டதாக தனிப்படையினர் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட 31 கிலோ 700 கிராம் தங்கமும் மொத்தமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கோயம்புத்தூரில் முகாமிட்டுள்ள தனிப்படை போலீசார், நகைகளை விற்க கொள்ளை கும்பல் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படும் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள நகைக்கடை ஒன்றின் உரிமையாளரான ஸ்ரீவஸ்தவ்விடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, வங்கியின் இணைய சேவையை துண்டித்து கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியதாக கொள்ளையன் முருகன் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கொள்ளை சம்பவத்தை கடந்த 10 நாட்களாகவே திட்டமிட்ட முருகன், கொள்ளையில் ஈடுபடுவதற்கு முன்பு அரும்பாக்கம் வங்கிக் கிளையின் இணைய சேவையை துண்டித்து விட்டதாகவும் இதனால் வங்கியின் செயல்பாடு டெல்லியின் தலைமையகத்திற்கு தெரியாமல் முடக்கப்பட்டதாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளான்.

டெல்லியில் இருந்து ஊழியர்களை தொடர்பு கொண்டு விசாரிப்பார்கள் என்பது தெரிந்து வங்கிகளில் இருந்த மூன்று ஊழியர்களின் செல்போன்களையும் பறித்து வைத்துக் கொண்டதாகவும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி 15 நிமிடத்தில் ஸ்ட்ராங் ரூமில் இருந்த லாக்கரிலிருந்து ஒட்டுமொத்த தங்கத்தையும் கொள்ளையடித்து விட்டதாக முருகன் வாக்குமூலம் கொடுத்துள்ளான்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments