தாய்கிழவி பாட்டுக்காக மினி பேருந்தை மறித்து ஓட்டுனர் மீது தாக்குதல்..!

0 2899
தாய்கிழவி பாட்டுக்காக மினி பேருந்தை மறித்து ஓட்டுனர் மீது தாக்குதல்..!

நாகப்பட்டினத்தில் மினி பேருந்து ஒன்றில் தனுஷ் படத்தின் பாடலை ஒலிபரப்ப மறுத்த பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரை, இழுத்துச்சென்று தாக்கிய தனுஷ் ரசிகரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பஸ் டிரைவரை, பார்ட்டி டிஜேவாக நினைத்து போட்டு தாக்கிய சாராய கும்பல் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு

நாகப்பட்டினத்தில் இருந்து ஆய்மழை கிராமத்திற்கு செல்லும் தனியார் மினி பேருந்தில் கோட்டை வாசல்படி கிராமத்தில் ஒரு இளைஞர் ஏறி உள்ளார். பேருந்தில் சரத்குமார் நடித்த படத்தில் இடம் பெற்ற காதல் பாடல் ஒன்று பாடிக் கொண்டிருந்தது

இன்னும் எத்தனை வருசத்துக்கு தான் இதே பாடலை போட்டுக் கொண்டிருப்பீர்கள் தனுஷ் பாட்டு இருந்தா போடுங்கள் எனசத்தம் போட்டுள்ளார். இதனை ஓட்டுனர் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாத நிலையில் அருகில் சென்று தனுஷ் நடித்த புதிய படத்தில் இடம் பெற்ற தாய் கிழவி பாடலை போடச்சொன்னதாக கூறப்படுகின்றது. அதற்கு ஓட்டுனர் அந்த இளைஞரைடம் எகத்தாளமாக பதில் சொன்னதாக கூறப்படுகின்றது.

இதையடுத்து அந்த பேருந்தில் இருந்து இறங்கிய அந்த இளைஞர், தனது கூட்டாளிகள் 6 பேரை அழைத்துக் கொண்டு வந்து, மீண்டும் அந்த பேருந்துவரும் வரை காத்திருந்து பேருந்தை மறித்து , சொன்ன பாடலை போட்டா என்ன குறைஞ்சா போயிருவ ? எனக் கேட்டு ஓட்டுனரை இழுத்துச்சென்று சரமாரியாக அடித்து உதைத்ததாக கூறப்படுகின்றது.

இதனை பார்த்து பேருந்தில் இருந்த சிலர் ஓடிச்சென்று மீட்க முயல அந்த கும்பல் உள்ளூர் சாராய வியாபாரிகள் என்று கூறியதால் தடுக்கச்சென்றவர்களும் தயங்கி நின்றனர். பலத்த காயமடைந்த ஓட்டுனர் மற்றும் நடத்துனர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

தனுஷ் பாட்டுக் கேட்டு ஓட்டுனரை தாக்கிய புகாரில் அகரஒரத்தூரை சேர்ந்த அஜீத் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர் தலைமறைவான கூட்டாளிகளை தேடிவருகின்றனர்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments