500 சவரன் நகையும் குடிச்சி தீர்த்துட்டேன்.. மாடல் அழகி பகீர்..! கார்கள் - ஒரு டுகாட்டி பைக் ஸ்வாகா.!

0 55326

தூத்துக்குடியைச் சேர்ந்த தொழில் அதிபரிடம் பரிசாகப் பெற்ற 550 சவரன் நகைகளையும் விற்று, ஸ்டார் ஓட்டல்களில் மது அருந்தி தீர்த்து விட்டதாக கைதான மாடல் அழகி தெரிவித்ததால் பைனாஸ்சியர் குடும்பம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

சென்னை பூந்தமல்லியில் தங்கி குடும்பத்துடன் பைனான்ஸ் தொழில் செய்து வந்தவர் சேகர். தூத்துக்குடியை சேர்ந்த இவர், வட்டிக்கு வட்டி போட்டதால் எக்கச்சக்கமாக குட்டிபோட்ட பணத்தை வைத்து சேகர் இஷ்டத்துக்கு ஆட்டம் போட்டதோடு, வீட்டில் இருந்த மனைவியின் நகைகளையும் திருடிச்சென்று காதலிக்கு அள்ளிவிட்டதால் தற்போது 550 சவரன் நகைகளை பறிகொடுத்து காதலியான மாடல் அழகியுடன் கைதாகி சிறையில் கம்பி எண்ணி வருகின்றார்..!

மாடல் அழகி ஸ்வாதியிடம் கொடுத்த 550 சவரன் நகைகள் என்னவானது என்பது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல் அம்பலமானது..!

சேகரின் மனைவி தமிழ்ச்செல்வி உடல் நலகுறைவால் தாய் வீட்டிற்கு சென்றதை சாதகமாக்கி க் கொண்டு ஓட்டல் ஓட்டலாக சுற்றிய சேகருக்கு புரோக்கர் மூலமாக அறிமுகமானார் ஸ்வாதி. ஆரம்பத்தில் ஆயிரக்கணக்கில் அள்ளிக்கொடுத்த சேகர், மாடல் அழகி என்று சொல்லப்பட்டதால் அழகில் மயங்கி லட்சக்கணக்கில் அள்ளிக் கொட்டத்தொடங்கி உள்ளார்.

அந்தவகையில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 550 சவரன் நகைகள், 30 லட்சம் ரூபாய் பணம் , 4 சொகுசு கார்கள் , 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள டுகாட்டி மோட்டார் சைக்கிள் போன்றவற்றை சேகர் வட்டிப்பணத்தில் வாரி வழங்கியது தெரியவந்தது.

போலீஸ் விசாரணைக்கு முன்பாக தமிழ்ச்செல்வி தூத்துக்குடியில் இருந்து உறவினர்களை அழைத்து வந்து அழகி ஸ்வாதியிடம் இருந்து 700 கிராம் நகைகளைக் கைப்பற்றி சென்று உள்ளார். மீதம் உள்ள நகைகள் எங்கே என்று கேட்டதற்கு பதில் சொல்லாமல் மவுனம் சாதித்த ஸ்வாதி, மாயமான நிலையில் போலீசில் சிக்கி உள்ளார். இதற்கிடையே போலீசார் நடத்திய விசாரணையில் , தனக்கு ஸ்டார் ஓட்டல்களில் மது அருந்தும் பழக்கம் உள்ளதாகவும், நகைகள் அனைத்தையும் விற்று , அங்கு சென்று ஆசை தீர மது அருந்தி அத்தனை நகைகளையும் தீர்த்து விட்டதாக ஸ்வாதி கூறி உள்ளார்.

தன்னுடன் ஜாலியாக பொழுதை கழித்த மகிழ்ச்சியில் சேகர் தனக்கு கட்டணமாகவும், பரிசாகவும் கொடுத்த நகைகளை திரும்ப கேட்க யாருக்கும் உரிமை இல்லை என்று கூறி யுள்ளார் ஸ்வாதி.

4 கார்களில் ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மீதம் உள்ள 3 கார்களும், டுகாட்டி பைக்கும் எங்கே என்று கேட்ட போது, தனது இளம் காதலனுக்கு பைக்கை கிப்டாக வழங்கி இருப்பதாகவும், 3 கார்களை ஆண் நண்பர்களிடம் கொடுத்து வைத்திருப்பதாகவும் ஸ்வாதி கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

பலமுறை முயன்றும் சினிமா வாய்ப்பு கிடைக்காததால் , தனது அழகை முதலீடாக்கி சினிமாவாய்ப்புக்காக அலைந்த போது, அள்ளிக்கொடுக்கும் வள்ளல் போல சேகர் தன்னிடம் சிக்கியதாகவும், அவர் கொடுத்த பணம் நகை எல்லாம் செலவாகிப் போச்சி என்று கேசுவலாக கூறியதால் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனால் மொத்த நகைகளையும் இழந்து என்ன செய்வதென்று தெரியாமல் சேகர் குடும்பத்தினர் விழிபிதுங்கி போயுள்ளனர். அதே நேரத்தில் திருட்டு நகைகளை ஸ்வாதி எங்கெங்கு விற்றார் ? என்பதைக் கண்டறிந்து போலீசார் மீட்டுத்தர கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments