பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் ராஜினாமா..!

0 3213
பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் ராஜினாமா..!

பீகாரில் முதலமைச்சர் நிதிஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய நிதிஷ்குமார் லாலு கட்சியுடன் இணைந்து மீண்டும் ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளார். 

பீகாரில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் - பாஜகவின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. பாஜக மீது அதிருப்தியில் இருந்து வந்த நிதிஷ்குமார், மத்திய அரசு அழைப்பு விடுத்த கூட்டங்களையும் புறக்கணித்து வந்தார்.

இந்நிலையில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், ஆளுநர் பஹூ சவுகானை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார். இதன்மூலம், பீகாரில் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.கா கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்தது.

ராஜினாமா கடிதத்தை அளித்த பின்னர் நிதிஷ்குமார், தேஜஸ்வி யாதவ் உடன் ராப்ரி தேவியின் இல்லத்திற்கு நேரில் சென்றார். புதிய கூட்டணி அரசு அமைய நிதிஷ்குமார் அப்போது ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் ராப்ரி தேவியிடம் ஆதரவு கோரினார்.

மொத்தம் 243 தொகுதிகளை கொண்ட பீகாரில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்திற்கு 45 எம்.எல்.ஏக்களும், லாலுபிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தள் கட்சிக்கு 79 எம்.எல்.ஏக்களும், காங்கிரசுக்கு 19 எம்.எல்.ஏக்களும், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சிக்கு 12 எம்.எல்.ஏக்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 4 எம்.எல்.ஏக்களும் உள்ளனர்.

பாஜக வுக்கு 77 எம்.எல்.ஏக்களும், இதரகட்சிகள் மற்றும் சுயேட்சைகள் வசம் 6 எம்.எல்.ஏக்களும் உள்ளனர். பெரும்பான்மைக்கு 122 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில் ஆர்.ஜே.டி, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளை சேர்த்து 159 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சியமைக்க நிதிஷ்குமார் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே, ஆளுநரை சந்தித்தப்பின் செய்தியாளர்களை சந்தித்த நிதிஷ்குமார் தற்போது அமைந்துள்ள மகாகத்பந்தன் கூட்டணியில் 7 கட்சிகளும், சுயேட்சைகளும் இடம் பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

புதிய அரசு பதவியேற்பது குறித்து ஆளுநர் தான் முடிவு செய்வார் என்றும் நிதிஷ்குமார் அப்போது குறிப்பிட்டார். இந்த செய்தியாளர் சந்திப்பின் போது தேஜஸ்வி யாதவும் உடன் இருந்தார். இதனிடையே புதன்கிழமை மாலை 4 மணிக்கு பீகார் முதலமைச்சராக நிதிஷ்குமார் பதவியேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments