பயனிழந்த செயற்கைக் கோள்கள்.. SSLV D-1 ராக்கெட் திட்டம் தோல்வி

0 2999

எஸ்.எஸ்.எல்.வி டி-1 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட 2 செயற்கைக் கோள்களையும் சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்த முடியாததால் அவற்றை இனி பயன்படுத்த முடியாது என இஸ்ரோ அறிவித்துள்ளது.

பி.எஸ்.எல்.வி மற்றும் ஜி.எஸ்.எல்.வி வகை ராக்கெட்கள் உதவியுடன் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வரும் இஸ்ரோ, விண்வெளித்துறையின் தேவை கருத்தில் கொண்டு 500 கிலோ வரையிலான எடையுடன் சிறிய செயற்கைக்கோள்களை ஏவுவதற்காக, சிறிய ரக ராக்கெட்டுகளை வடிவமைத்தது.

அந்த வகையில் 120 டன் எடையுடன் தயாரிக்கப்பட்ட எஸ்.எஸ்.எல்.வி. டி-1 சிறிய ரக ராக்கெட் இஓஎஸ், ஆசாதி சாட் ஆகிய இரு செயற்கைக்கோள்களுடன் இன்று காலை 9.18 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.

கடலோர நிலப் பயன்பாடு, பயன்பாடற்ற நிலங்களுக்கான எல்லை வரைபடம் தயாரிப்பு உள்ளிட்ட பணிகளுக்காக 145 கிலோ எடைக் கொண்ட இஓஎஸ்-2 செயற்கைக்கோளையும், ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா என்ற அமைப்பு 75 கிராமப்புற பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகளைக் கொண்டு 75 மென்பொருள்களை உள்ளடக்கி தயாரித்த ஆசாதி சாட் செயற்கைக்கோளையும் எஸ்.எஸ்.எல்.வி டி-1 ராக்கெட் சுமந்துச் சென்றது.

ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட அடுத்த ஒரு மணி நேரத்தில் பள்ளி மாணவிகள் தயாரித்த ஆசாதிசாட் செயற்கைக்கோளில் இருந்து சிக்னல் கிடைப்பதில் சிக்கல் நீடிப்பதாகவும், சிக்னலை மீண்டும் பெற முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், விண்ணில் செலுத்தப்பட்ட 2 செயற்கைக்கோள்களும் பயனிழந்ததாக இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எஸ்.எஸ்.எல்.வி -டி1 ராக்கெட், செயற்கைக்கோள்களை வட்ட சுற்றுப்பாதைக்கு பதிலாக நீள்வட்ட சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தியதால் செயற்கைக்கோள்களை இனி பயன்படுத்த முடியாது என்றும் சென்சார் செயலிழந்ததே இதற்கு காரணம் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

மேலும், இது தொடர்பாக குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ள இஸ்ரோ, விரைவில் எஸ்.எஸ்.எல்.வி டி-2 ராக்கெட்டை உருவாக்குவோம் என்றும் கூறியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments