விண்ணில் பாய்ந்தது... எஸ்.எஸ்.எல்.வி. டி-1 ராக்கெட்!

0 2011

பள்ளி மாணவியர்களால் தயாரிக்கப்பட்ட செயற்கைக்கோள் மற்றும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்களுடன் இஸ்ரோவின் சிறிய ரக ராக்கெட்டான எஸ்.எஸ்.எல்.வி. டி-1 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. 

இஸ்ரோ, பி.எஸ்.எல்.வி மற்றும் ஜி.எஸ்.எல்.வி வகை ராக்கெட்கள் உதவியுடன் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது.
விண்வெளித்துறையின் தேவையை கருத்தில் கொண்டு 500 கிலோ வரையிலான எடையுடன் சிறிய செயற்கைக்கோள்களை ஏவுவதற்காக இஸ்ரோ சிறிய ரக ராக்கெட்டுகளை வடிவமைத்துள்ளது. அந்த வகையில் 120 டன் எடையுடன் தயாரிக்கப்பட்ட எஸ்.எஸ்.எல்.வி. டி-1 சிறிய ரக ராக்கெட் முதன்முறையாக இன்று விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்த எஸ்.எஸ்.எல்.வி. டி-1 ராக்கெட் இஓஎஸ், ஆசாதி சாட் ஆகிய இரு செயற்கைக்கோள்களை சுமந்து செல்கிறது. சுமார் 145 கிலோ எடை கொண்ட இஓஎஸ்-2 செயற்கைக்கோள் கடலோர நிலப் பயன்பாடு, பயன்பாடற்ற நிலங்களுக்கான எல்லை வரைபடம் தயாரிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு உதவியாக இருக்கும். இதற்காக 2 நவீன ரக கேமராக்கள் அதில் பொருத்தப்பட்டுள்ளன.

8 கிலோ எடைக்கொண்ட மற்றொரு செயற்கைக்கோளான ஆசாதிசாட்-ஐ ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா என்ற அமைப்பு தயாரித்துள்ளது. நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 கிராமப்புற அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 750 பள்ளி மாணவிகள் இணைந்து 75 மென்பொருள்களை உள்ளடக்கி ஆசாதிசாட் செயற்கைக்கோள் தயாரிக்கப்பட்டுள்ளது.

இ.ஓ.எஸ், ஆசாதி சாட் செயற்கைக்கோள்களுடன், எஸ்.எஸ்.எல்.வி டி-1 ராக்கெட்டை செலுத்துவதற்கான ஏழு மணி நேர கவுண்ட்டவுன் இன்று அதிகாலை 2.26 மணிக்குத் தொடங்கிய நிலையில், சரியாக காலை 9.18 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்நிலையில், பள்ளி மாணவிகளை கொண்ட அமைப்பு உருவாக்கிய ஆசாதிசாட் செயற்கைக்கோளில் இருந்து சிக்னல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார். SSLV-D1 ராக்கெட் அனைத்து நிலைகளிலும் எதிர்பார்த்தபடி செயல்பட்டதாக தெரிவித்த அவர், ராக்கெட் நிலையான சுற்றுப்பாதையை அடைவது தொடர்பான பணியின் இறுதி குறித்து பகுப்பாய்வு செய்வதாகவும் பள்ளி மாணவிகள் செயற்கைக்கோளின் சிக்னலை மீண்டும் பெற முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments