தைவானை சுற்றிலும் சீன ராணுவம் போர்ப்பயிற்சி

0 1484

சீனாவின் எதிர்ப்பை மீறி நான்சி பெலோசி தைவான் சென்றிருந்த நிலையில், அந்நாட்டைச் சுற்றிலும் சீன ராணுவம் போர்ப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளதால் தென் சீனக் கடல் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி கடந்த 2-ம் தேதி தைவானுக்கு சென்றபின், தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீனா போர்ப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

தைவானை சுற்றியுள்ள 6 பிராந்தியங்களில் நேற்று சீன ராணுவத்தினர் போர்ப்பயிற்சியில் ஈடுபட்டனர். தைவானுக்கு கிழக்கே கடற்பகுதியில் துல்லியமான ஏவுகணை தாக்குதல்களும் நடத்தப்பட்டன.

சீன மக்கள் ராணுவத்தின் கிழக்கு தியேட்டர் கமாண்ட் தைவானை சுற்றி தொடர்ச்சியான கூட்டு ராணுவ நடவடிக்கைகளை தொடர்ந்தது. இதில் பல்வேறு வகையான மேம்பட்ட போர் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டன.

தைவானை சுற்றியுள்ள கடல் பகுதியில் போர்க் கப்பல்களை நிறுத்தி ஏவுகணைகளை வீசி நிகழ்த்தும் சீனாவின் ஒத்திகை, நாளை மறுநாள் வரை நடக்கிறது.

சீனாவின் கிழக்கு கடற்கரையிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் இலக்குகளை துல்லியமாக தாக்கியதாகவும், பயிற்சியில் Dongfeng DF-17 ஹைப்பர்சோனிக் ஏவுகணையும் அடங்கும் என சீன தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

விமானம் தாங்கி கப்பல்களை தாக்கும் பயிற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் சீன தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. தைவானின் மாட்சு தீவுகளுக்கு அருகே நேற்று பிற்பகல் இரண்டு ஏவுகணைகளை சீனா வீசியது.

தைவான் கடற்பகுதியில் கப்பல் மற்றும் விமான போக்குவரத்தை சீர்குலைக்கும் வகையில் அப்பகுதியில் சீன ராணுவம் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. சீனாவின் 22 போர் விமானங்கள் தைவான் வான்வெளியை அத்துமீறி நுழைந்துள்ளது.

தொடர் ஏவுகணைகள் தைவானின் வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கில் உள்ள நீர்நிலைகளில் ஏவப்பட்டதாக தெரிவித்துள்ள தைவான் வெளியுறவு அமைச்சகம், இது தங்கள் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதுடன், பிராந்தியத்தில் பதட்டத்தை அதிகரிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

சீனாவின் ராணுவ பயிற்சிகள் சட்டவிரோதமானது மற்றும் பொறுப்பற்றது என்றும் தைவான் தெரிவித்துள்ளது.தங்கள் நாடு மோதல்களை தூண்டாது என்றும், ஆனால் இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்பை உறுதியாக பாதுகாக்கும் என்றும் தைவான் அதிபர் சாய் இங் வென் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments