நீதிபதியை மாற்றக்கோரி கடிதம் - ஓ.பி.எஸ். தரப்பிற்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கண்டனம்

அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கை விசாரிக்கும் தன்னை மாற்ற வேண்டுமென தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பிய ஓ.பன்னீர்செல்வம் தரப்பிற்கு உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜூலை 11ல் பொதுக் குழுவுக்கு தடைகோரிய வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி, உத்தரவில் தேவையற்ற கருத்துக்களை தெரிவித்ததாகக் கூறி, வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றக்கோரி ஓ.பி.ஸ். தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டது. இந்நிலையில், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் பொதுக்குழு வழக்கு வந்தபோது, விசாரணையை தள்ளிவைக்க கோரிய ஓ.பி.எஸ்., தரப்பு, கடிதம் குறித்து தெரிவித்தது.
இதனை, நீதித்துறையை களங்கப்படுத்தும் செயல் மட்டுமல்ல, கீழ்த்தரமான செயல் என்றும் நீதிபதி தெரிவித்தார். தீர்ப்பில் திருத்தம் இருந்தால் தன்னிடமே முறையீடு செய்திருக்கலாம் என தெரிவித்த அவர் விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தார்.
இதனிடையே, இன்று நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தெரிவித்த கருத்துகள் குறித்து தலைமை நீதிபதியிடம் ஓ.பி.எஸ். தரப்பில் முறையீடப்பட்டுள்ளது.
Comments