காவிரியில் வெள்ளப்பெருக்கு.. தாழ்வான பகுதிகளுக்கு எச்சரிக்கை..!

0 2359
காவிரியில் வெள்ளப்பெருக்கு.. தாழ்வான பகுதிகளுக்கு எச்சரிக்கை..!

கர்நாடகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் மாலை 4 மணி நிலவரப்படி பிலிக்குண்டுவில் தமிழகம் வரும் காவிரியாற்றில் நீர்வரத்து வினாடிக்கு 2 லட்சத்து 15ஆயிரம் கன அடியாக உள்ளது.

கர்நாடகத்தின் கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் ஏற்கெனவே நிரம்பியுள்ள நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து நொடிக்கு 81 ஆயிரத்து 112 கனஅடி நீரும், கபினி அணையில் இருந்து நொடிக்கு 15 ஆயிரம் கனஅடி நீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

 கர்நாடக அணைகளுக்குக் கீழ் உள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால் மாலை 4 மணி நிலவரப்படி பிலிக்குண்டு என்னுமிடத்தில் காவிரியில் தமிழகத்துக்கு நொடிக்கு 2 இலட்சத்து 15 ஆயிரம் கன அடி நீர் வந்துகொண்டிருந்தது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் அனைத்து அருவிகளையும் தடுப்பு வேலிகளையும் மூழ்கடித்து ஆறு முழுவதும் பரந்து விரிந்து வெள்ளம் பாய்கிறது.

 தருமபுரி மாவட்டத்தில் காவிரி ஆற்றின் கரையோரங்களில் தாழ்வான பகுதிகளில் இருந்த மக்களை வெளியேற்றிப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர். ஆற்றில் குளிக்கவும், பரிசலில் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் உச்ச அளவான 120 அடிக்குத் தண்ணீர் நிரம்பியுள்ள நிலையில் தொட்டில்பட்டி என்னுமிடம் வரை தண்ணீர் தேங்கியுள்ளது. தொட்டில்பட்டியில் இருந்து அணையின் நீர்ப்பரப்பைப் பார்க்கும்போது கடல்போல் காட்சியளிக்கிறது.

 மாலை 4 மணி நிலவரப்படி அணைக்கு 2 இலட்சத்து 10 ஆயிரம் கன அடி நீர் வந்துகொண்டிருந்தது. அணையில் இருந்து சுரங்க மின் நிலையம் வழியாக நொடிக்கு 23 ஆயிரம் கனஅடி நீரும், 16 கண் மதகுகள் வழியாக ஒரு இலட்சத்து 87 ஆயிரம் கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. கிழக்கு மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு நொடிக்கு 400 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

 காவிரியில் 2 இலட்சத்து 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்களில் காவிரிக் கரையில் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. ஆற்றில் குளிக்கவோ, வேடிக்கை பார்க்கவோ வேண்டாம் எனப் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானிக் கூடுதுறையில் காவிரியாற்றில் சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலங்களைத் தொடுமளவு வெள்ளம் பொங்கிப் பெருக்கெடுத்துப் பாய்கிறது.SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments