ஓடும் பேருந்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய காவலர்..! தர்ம அடி கொடுத்த பயணிகள்..!
ஓடும் பேருந்தில் 10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலரை சுற்றிவளைத்த பயணிகள் தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அரசு பேருந்தில் தாயாரின் அருகில் அமர்ந்திருந்த மாணவிக்கு நேர்ந்த கொடுமை குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..
மதுராந்தகம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளுடன் தாம்பரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு அரசு பேருந்தில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். பேருந்தில் 3 பேர் அமரக்கூடிய இருக்கையில் அந்த பெண்ணும் 10ஆம் வகுப்பு படித்து வரும் அவரது 15 வயது மகளும் அமர்ந்திருந்தனர்.
பேருந்து மதுராந்தகத்தை நெருங்கிக் கொண்டிருந்த நேரம் பின் இருக்கையில் அமர்ந்திருந்த 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர், அந்த மாணவியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது. தாய் கண்ணயர்ந்த நிலையில் அந்த மாணவி என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்க, மற்றொரு பயணி இதனை பார்த்து தாயிடம் கூறி உள்ளார். ஆத்திரம் அடைந்த தாயும் , சக பயணிகளும் சேர்ந்து எல்லை மீறிய இளைஞரை சுற்றிவளைத்து தர்ம அடி கொடுத்தனர்
மதுராந்தகம் நகர் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் அரசு பேருந்தை நிறுத்தி அந்த இளைஞரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அத்துமீறலில் ஈடுபட்டவர் , புனித தோமையார் மலை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்துவரும் சதீஷ் என்பதும் அவர் முதுகரை கிராமத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
பள்ளிச் சிறுமியிடம் அத்துமீறியதால் போக்சோ வழக்கு பதிவு செய்து அந்த காவலர் சதீஷ் கைது செய்யப்பட்ட நிலையில் , மேல்மருத்துவத்தூர் அனைத்து மகளிர் போலீசார் சதீஷின் பின்னனி குறித்து விசாரித்து வருகின்றனர்.
Comments