ரூ.25 லட்சம் மோசடி வழக்கு... கோவை ஜோதிடர் பிரசன்னா குடும்பத்துடன் விஷம் குடித்தார்..! வீடியோ வெளியிட்ட தாய் உயிரிழப்பு
கோவையில் இந்து மக்கள் கட்சியின் ஜோதிடர் பிரசன்னா என்பவர் மீது 25 லட்சம் ரூபாய் மோசடி வழக்கு காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டதை அடுத்து, அவர் குடும்பத்துடன் வீடியோ வெளியிட்டு விஷம் குடித்த நிலையில் ஜோதிடரின் தாய் பரிதாபமாக பலியானார்.
கோவை செல்வபுரத்தை சேர்ந்த அருள்வாக்கு ஜோதிடர் பிரசன்னா , இவர் குபேரீஸ்வரர் அருள்வாக்கு மடத்தை நடத்தி வந்தார். பிரசன்னாவுக்கு, சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கருப்பையா என்பவர் அறிமுகமாகி உள்ளார். ஊரப்பாக்கத்தில் உள்ள தனது நிலப்பிரச்சனையில் இருந்து விடுபட எண்ணி அருள்வாக்கு கேட்க சென்றுள்ளார்.
இந்து மக்கள் கட்சியின் ஜோதிடர் அணியின் தலைவராக உள்ள பிரச்சன்னா, நிலப்பிரச்சனையை தீர்த்து தருவதாக கூறி கருப்பையாவிடம் பல்வேறு பூஜைகள் செய்வதாக கூறி 25 லட்சத்து 59 ஆயிரத்து 200 ரூபாய் பணத்தை பெற்றதாக கூறப்படுகின்றது.
அதே போல மாங்கல்ய பூஜை செய்ய வேண்டும் என கருப்பையா மனைவியின் 15 பவுன் தாலிக்கொடியை பெற்று மோசடி செய்ததாக கூறப்படுகின்றது. இது தொடர்பாக கருப்பையா அளித்த புகாரின் பேரில் கோவை போலீசார் பிரசன்னா, அவரது மனைவி அஸ்வினி, உறவினர்கள் ஹரிபிரசாத், பிரகாஷ் ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில் தன்மீது போலீசார் பொய்யாக வழக்கு பதிவு செய்து மிரட்டுவதாக வீடியோ வெளியிட்ட பிரசன்னா மனைவி அஸ்வினி, தாய் கிருஷ்ணகுமாரி ஆகியோர் இரு பெண் குழந்தைகளுடன் பூச்சி மருத்து குடித்து தற்கொலை செய்து கொள்ளும் விபரீத முடிவை மேற்கொண்டுள்ளனர்
பிரசன்னாவின் தாய் கிருஷ்ணகுமாரி தனது இரு பேத்திகளை வைத்து வீடியோ பதிவிட்டுள்ளார் அதில் தனது மகன் அப்பாவி என்று கூறி உள்ளார்
வீட்டில் உயிருக்கு போராடிய பிரச்சன்னாவின் குடும்பத்தை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில், பிரசன்னாவின் தாய் கிருஷ்ணகுமாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.பிரசன்னா, அவரது மனைவி அஸ்வினி இரண்டாவது குழந்தை ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. மூத்தமகள் விஷம் அருந்தவில்லை என்ரு கூறப்படுகின்றது.
Comments