குடியரசுத் தலைவரின் கொடியைத் தமிழ்நாடு காவல்துறைக்கு முதலமைச்சரிடம் வழங்கினார் வெங்கைய நாயுடு.!

தமிழ்நாடு காவல்துறைக்குக் குடியரசுத் தலைவரின் சிறப்புக் கொடியைக் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு வழங்கிச் சிறப்பித்துள்ளார்.
தமிழ்நாடு காவல்துறைக்குக் குடியரசுத் தலைவரின் சிறப்புக் கொடி 2009ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. 13ஆண்டுகளுக்குப் பின் அந்தக் கொடியை வழங்கும் விழா சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டுத் திடலில் இன்று நடைபெற்றது.
விழாவுக்குத் தலைமையேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குக் காவல்துறை உயர் அதிகாரிகள் பூங்கொத்துக் கொடுத்து வரவேற்றனர்.
முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்ட குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடுக்குக் காவல்துறையினரின் இசைவாத்தியம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. குதிரைப்படையினர் புடைசூழ அவரை விழா மேடைக்கு அழைத்து வந்தனர்.
காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையைக் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு திறந்த வாகனத்தில் சென்றபடி பார்வையிட்டார்.
குடியரசுத் தலைவரின் கொடியைத் தமிழ்நாடு காவல்துறைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வெங்கைய நாயுடு வழங்கினார். முதலமைச்சரிடம் இருந்து காவல்துறைத் தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு கொடியைப் பெற்றுக்கொண்டார்.
விழாவில் உரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு, நாட்டிலேயே சட்டம் ஒழுங்கு பாதுகாப்பில் தமிழ்நாடு காவல்துறை முன்னோடியாகத் திகழ்வதாகத் தெரிவித்தார்.
நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிக மகளிர் காவல்நிலையங்கள் இருப்பதாகவும், தமிழகக் காவல்துறையில் தான் அதிக மகளிர் பணியாற்றுவதாகவும் குறிப்பிட்டார்.
கணினிமயமாக்கலில் முன்னோடியாகத் திகழும் தமிழ்நாடு காவல்துறை, இணையக் குற்றங்களைத் தடுப்பதிலும் சிறப்பாகச் செயல்படுவதாகத் தெரிவித்தார்.
இயற்கையையும் பண்பாட்டையும் நாம் பாதுகாத்தால் எதிர்காலம் நம்மை நன்றாகப் பாதுகாக்கும் என வெங்கைய நாயுடு தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு காவல்துறையில் டிஜிபி முதல் காவலர்கள் வரை அனைவருக்கும் காவல் பதக்கம் வழங்கப்படும் என அறிவித்தார்.
தமிழ்நாடு அமைதியாக இருப்பதால் தான் தொழில்துறையில் முதலீடுகள் குவிவதாகப் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
Comments