சென்னை – திருச்சி சாலையில் துண்டாகி ஆடிய பாலம்… போக்குவரத்து மாற்றம்..!

0 5167
சென்னை – திருச்சி சாலையில் துண்டாகி ஆடிய பாலம்… போக்குவரத்து மாற்றம்..!

சென்னை திருச்சி விரைவுச் சாலையில் ஓங்கூர் சுங்கச்சாவடி அருகே பழைய ஆற்று பாலம் துண்டாகி மேலும் கீழுமாக ஆடிக் கொண்டிருப்பதாக செய்திகள் வெளியானதையடுத்து அதில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மாற்றுப்பாதை குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு

சென்னை - திருச்சி விரைவுச்சாலையில் நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. 24 மணி நேரமும் இந்த சாலையில் வாகனப் போக்குவரத்து நெரிசலாகவே காணப்படும்.

இந்த சாலையில் வாகனங்கள் விரைவாக செல்லும் வகையில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை, நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்ட போது, இதற்காக முக்கிய சந்திப்புக்களில் மேம்பாலங்களும், சாலையின் குறுக்கில் செல்லும் ஆற்றுப்பகுதியில் புதிய பாலங்களும் கட்டப்பட்டன.

இதே போன்று சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், விழுப்புரம் மாவட்ட எல்லையான திண்டிவனம் அடுத்த ஓங்கூர் சுங்கச்சாவடி அருகே ஆற்றின் குறுக்கில் பாலம் கட்டப்பட்டுள்ளது. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு இருபது அடியில் நான்கு கான்கிரீட் ஆற்றுப்பாலம் கட்டப்பட்டுள்ளது.

இந்த பாலத்தில் சென்னை - திருச்சி மார்க்கத்தில், புதன்கிழமை சென்ற வாகனங்கள் அந்த பழைய பாலத்தை கடந்த போது அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். பாலம் இரண்டாக உடைந்து மேலும் கீழுமாக ஆடியபடி இருந்தது. இது குறித்து செய்தி வெளியானதால் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், ரோந்து போலீசார் அப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர்.

பாலம் கட்டி பல ஆண்டுகள் கடந்து விட்டதால், பாலம் சேதமடைந்து, வாகனங்கள் செல்லும் போது அதிர்வு ஏற்பட்டதாக தெரிவித்த அதிகாரிகள் இந்த பாலம் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது என்றும் தற்போது இந்த பாலத்தில் சேதம் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர்.

இந்த பாலம் புதிதாக கட்டப்பட்ட போது கான்கிரீட் தளத்தின் கீழ் பகுதியில், மேலே செல்லும் வாகனங்கள் வேகமாகச் சென்றாலும் அதிர்வுகள் ஏற்படாத வகையில் ரப்பர் பேரிங் பேட் (rubber bearing pad) போன்ற அமைப்பு ஸ்ப்ரிங் முறையில் பொருத்தப்பட்டிருந்தது. இது நாட்கள் கடந்ததாலும், அதிகளவில் வாகனங்கள் இந்த பாலத்தை கடந்து செல்வதாலும் இவை சேதமடைந்து பாலம் பிரிந்து ஆடுவது போல அதிர்வு ஏற்பட்டதாக அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

பாலங்களில் ஒவ்வொரு ஆண்டும் பராமரிப்பு பணிகளை நெடுஞ்சாலைத்துறை முறையாக மேற்கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் பாலத்தின் கீழே உள்ள தூண்களில் வளர்ந்துள்ள மரங்கள் பெரிய அளவில் வளரும் பட்சத்தில் பாலத்தில் விரிசல் ஏற்படும் என்றும் வெளிப்பக்கம் மட்டும் வெள்ளையடித்துச் செல்லும் அதிகாரிகளின் அலட்சியப்போக்கே பாலம் சேதமடைந்ததற்கு காரணம் என்று வாகன ஓட்டிகள் குற்றஞ்சாட்டினர்.

சேதம் அடைந்த பாலத்தை ஹைட்ராலிக் முறையில் கான்கிரீட் பகுதியை உயர்த்தி அடிப்பக்கத்தில் அந்த ரப்பர் பேரிங் பேடை பொருத்தும் பணி தொடங்குவதாகவும், குறைந்தபட்சம் 25 நாட்களுக்கு மேல் இப்பணி நடைபெறும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

இதன் காரணமாக சேதம் அடைந்த அப்பாலத்தில் வாகன போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. அருகில் உள்ள பாலத்தில் இருவழி பாதையாக வாகனங்கள் கடந்து செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது

இருப்பினும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், அப்பகுதியில் மாவட்ட எஸ்.பி., ஸ்ரீநாதா உத்தரவின் பேரில், ஒலக்கூர் போலீசார் பேரி கார்டுகள் அமைத்து, வாகன ஓட்டிகளை மெதுவாக செல்வதற்கு அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திண்டிவனம் அருகே ஓங்கூர் பகுதியில் இருக்கும் சேதமடைந்த ஆற்றுப் பாலத்தை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன், மாவட்ட எஸ்.பி ஸ்ரீ நாதா உள்ளிட்டோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் மோகன், பாலத்தின் பராமரிப்பு பணிகள் 15 நாட்களுக்குள் முடிவடைந்து சோதனை ஓட்டத்திற்கு பிறகு வாகன ஓட்டிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments