தொடங்கியது செஸ் ஒலிம்பியாட்... தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

சர்வதேச சதுரங்க போட்டியான செஸ் ஒலிம்பியாட்டை சென்னையில் நடைபெற்ற விழாவில் முறைப்படி பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்.
இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இந்த முறை மாமல்லபுரத்தில் வருகிற ஆகஸ்டு மாதம் 10 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதன் தொடக்க விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது.
இந்த போட்டிகளை தொடங்கி வைப்பதற்காக குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். சதுரங்க பலகையின் கட்டங்களை ஒத்த, கருப்பு, வெள்ளை கட்டங்களை கொண்ட, வேட்டியும், வெள்ளை சட்டையும், அங்கவஸ்திரமும் அணிந்த பிரதமர் மோடி வருகை தந்தார்.
பின்னர் அங்கிருந்து சென்னையில் உள்ள ஐ.என்.எஸ். அடையாறு கடற்படைத் தளத்திற்கு பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் வந்து இறங்கினார். அங்கு அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி, உள்பட ஏராளமானவர்கள் வரவேற்றனர்.
அங்கிருந்து நேரு உள்விளையாட்டரங்கத்திற்கு பிரதமர் மோடி காரில் சென்றார். செல்லும் வழி நெடுகிலும் அவரை ஏராளமானவர்கள் திரண்டு நின்று வரவேற்றனர். அவர்களின் வரவேற்புக்கு இடையில் பிரதமர் மோடி விளையாட்டரங்கத்திற்கு சென்றார்.
கலை நிகழ்ச்சிகளுக்கு பின்னர் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் உள்ளிட்டோர் பேசினர். இதன் பின்னர் ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டது.
பின்னர் விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,வழக்கமாக செஸ் ஒலிம்பியாட் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய 18 மாதங்கள் ஆகும் என்றார்.ஆனால், தமிழ்நாட்டில் 4 மாதங்களில் செஸ் ஒலிம்பியாட் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்பட்டதாக அவர் கூறினார். குறுகிய காலத்தில் சிறப்பாக செஸ் ஒலிம்பியாட்டை நடத்துவதன் மூலம், தமிழ்நாட்டின் மதிப்பு, உலகளவில் மேலும் மேலும் உயரும் என்று அவர் குறிப்பிட்டார்.
சகோதரத்துவத்தை போற்றும் வகையில், செஸ் ஒலிம்பியாட் இலச்சினைக்கு 'தம்பி' என பெயரிட்டதாக கூறிய முதலமைச்சர், இதுபோன்ற போட்டிகளை நடத்தும் வாய்ப்புகளை தமிழகத்திற்கு தொடர்ந்து தர வேண்டுமென பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்தார்.
இதன் பின்னர் கருப்பு, வெள்ளை ராஜா, ராணி காய்களை மூடி இருந்த வெல்வெட் துணியை நீங்கி அவற்றை திறந்து வைத்து, போட்டிகளை பிரதமர் மோடி முறைப்படி தொடங்கி வைத்தார்.
பின்னர் தமிழில் வணக்கம் என்று கூறி உரையை தொடங்கிய பிரதமர் மோடி, இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி; வேளாண்மை செய்தற் பொருட்டு" என்ற திருக்குறளை மேற்கோள்காட்டினார்.
சதுரங்க விளையாட்டு தோன்றிய இந்தியாவில், செஸ் ஒலிம்பியாட் நடைபெறும் நமக்கெல்லாம் பெருமைமிகு தருணம் ஆகும் என்று அவர் குறிப்பிட்டார். நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால், நம்மை யாராலும் வெல்ல முடியாது என்பதை பெருந்தொற்று காலம் நமக்கு உணர்த்தியிருப்பதாக அவர் கூறினார்.
Comments