முக நூல் காதலியை தேடிவந்த இளைஞர்.. கடலில் தள்ளி கொலை..! மீனவர் கிராமத்தில் சம்பவம்

கேரளாவில் இருந்து முக நூல் காதலியை தேடி கன்னியாகுமரி கடற்கரை கிராமத்திற்கு சென்ற இளைஞர் கடலில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், காதலியின் உறவினர்கள் விரட்டியதால் கடலில் விழுந்து பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.
கன்னியா குமரி மாவட்டம் இரையுமன்துறை கடற்கரை பகுதியில் கடந்த 13 ம் தேதி 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் சடலம் அழுகிய நிலையில் கரை ஒதுங்கியது.
அந்த சடலத்தை கைப்பற்றி விசாரணையை முன்னெடுத்த நித்திரவிளை போலீசார் அது கேரள மாநிலம் விழிஞ்ஞம் பகுதியை சேர்ந்த கிரன் என்ற இளைஞர் என்பதை அவரது கையில் கட்டியிருந்த கயிற்றை வைத்து கண்டுபிடித்தனர். மேலும் அவரது உறவினர்களிடம் மேற்கொள்ளப்பட்ட, டி.என்.ஏ பரிசோதனை மூலம் அது இளைஞர் கிரண் என்பதை உறுதிபடுத்தினர்.
அவரது உறவினர்களிடம் நடத்திய விசாரணையில் முக நூல் காதலில் விழுந்ததால் இளைஞர் கிரண் கடலில் மூழ்கிய பின்ணணி வெளிச்சத்திற்கு வந்தது.
திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த கிரன் முகநூல் மூலம் அறிமுகமான ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் நேரடியாக பார்க்காமலேயே காதலித்து வந்த நிலையில் தனது காதலியை சந்திக்கும் ஆவலில் தனது நண்பருடன் ஆழிமலை மீனவர் கிராமத்திற்கு சென்று காதலி குறித்து விசாரித்துள்ளார்
இது பெண்ணின் உறவினர்களுக்கு தெரியவந்ததும், இளைஞர் கிரனை வழிமறித்து தாக்கியதோடு இருசக்கர வாகனத்தில் ஏற்றி ஆழிமலை கடலுக்கு அழைத்துச்சென்று விரட்டி விரட்டி தாக்கி உள்ளனர்.
அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடிய கிரண் கடல்பகுதியில் உள்ள பாறைஇடுக்கில் சென்று பதுங்கி உள்ளார்.
கடல் அலையின் வேகம் காரணமாக பாறை மீது ஏறிய போது காயங்களுடன் காணப்பட்ட கிரண் கால்தவறி கடலில் விழுந்து பரிதாபமாக பலியானதாக கூறப்படுகின்றது.
கிரன் பைக்கில் இருந்து இறங்கி தப்பி ஓடும் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார், கிரணின் உயிரிழப்புக்கு காரணமான காதலித்த பெண்ணின் சகோதரர் மற்றும் உறவினர் சஜித் ஆகிய இருவரை கைது செய்தனர்.
அதே நேரத்தில் தங்கள் மகனை காணவில்லை என கிரனின் பெற்றோர் விழிஞ்ஞம் போலீசில் புகார் அளித்திருந்த நிலையில், ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் உள்ள கிரணின் சடலத்தை ஆய்வுக்காக எடுத்துச் செல்ல கேரள போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
Comments